

பருவமழை பொய்த்ததாலும், தொடர் வறட்சியாலும் விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணை வறண்டு வருகிறது. இதனால், வரும் கோடை யில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற் படும் அபாயம் உருவாகி உள்ளது.
விருதுநகரில் சுமார் 20 ஆயிரத் துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 15 ஆயிரம் குடியிருப்பு களுக்கு நகராட்சி மூலம் ஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சுமார் 15 லட்சம் முதல் 20 லட்சம் லிட்டர் தண்ணீரும், எஞ்சிய 30 லட்சம் லிட்டர் குடிநீர், சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் நீர்த்தேக்கத்தில் இருந்து தினந்தோறும் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
இதற்காக ஆனைக்குட்டம் அணையின் கீழ் பகுதியில் நீரேற்று நிலையத்திலிருந்து விருதுநகருக்கு தேவையான குடிநீர் எடுக்கப்பட்டு, நகரின் பல இடங்களில் உள்ள 16 மேல்நிலை தொட்டிகளில் நிரப்பப்பட்டு, 90 பகுதிகளாக பிரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது பருவமழை பொய்த்ததாலும், கடும் வறட்சியாலும் குளங்கள், ஏரிகள், கிணறுகள் வறண்டு விட்டன. குடிநீர் ஆதாரங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், குடிநீருக்காக மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருவதோடு, டேங்கர்களில் கொண்டு வரப்படும் குடிநீரை, குடம் ரூ.12 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். விருதுநகர் பகுதி மக்களுக்கான, குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆனைக்குட்டம் அணையிலும் தண்ணீரின்றி வறண்டுள்ளது. ரூ. 5.60 கோடியில் கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்க அணையில் 125.75 மி. கன அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். அணையில் நீர் மட்டம் 95 மீட்டர்.
விருதுநகர் நகராட்சிப் பகுதியில் ஒரு நாளைக்கான நீரின் தேவை 65 லட்சம் லிட்டர். தற்போது, கடும் வெயில் காரணமாக அணை வறண்டுவிட்டதால் தேவையான அளவு நீரை உறிஞ்சி பெற முடியவில்லை. 125.152 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ள ஆனைக்குட்டம் அணையில் தற் போது 4.5 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட விருதுநகர் நகராட்சி பகுதிக்கு, தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை அலு வலர்களிடம் கேட்டபோது, கோடை வெயிலால் குடிநீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன. ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர் வற்றிப் போய் விட்டது. கிடைக்கும் நீரை பொதுமக்களுக்கு சீராக வழங்கி வருகிறோம். குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.