

நாடாளுமன்ற தேர்தலின்போது, அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரப் பயணங்களுக்கான செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படாமல் தவிர்ப்பது எப்படி என்று தேர்தல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அரசியல் கட்சித் தலைவர்கள், விமானம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபடும்போது, அது அந்தந்த வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாமல் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கும் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும், அந்தந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பட்டியலை அனுப்பி வைத்தால் அந்நபர்களின் பயணச் செலவுகள், வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படாது.
அங்கீகரிப்பட்ட கட்சிகளாக இருந்தால், 40 தலைவர்களின் பெயர்களையும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக இருந்தால், 20 தலைவர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கலாம். இந்த பட்டியலில் இல்லாதவர்களுக்கு, அச்சலுகை பொருந்தாது. பட்டிய லில் பெயர் இல்லாவிட்டால், நட்சத்திர பேச்சாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தாது.
தேர்தல் அறிவிக்கை
தேர்தல் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் மேற்கண்ட பட்டியல் அனுப் பப்பட வேண்டும். வரும் மார்ச் 29-ம் தேதியன்று, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படவுள்ளது.