Last Updated : 31 Oct, 2013 06:49 AM

Published : 31 Oct 2013 06:49 AM
Last Updated : 31 Oct 2013 06:49 AM

எதிர்க்கட்சிகளிடம் நெருக்கம் ஏற்படுத்திய பேரவை கூட்டம்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல், மிகக் குறைந்த நாட்களே நடந்த சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர், சூடாகவும், பரபரப்பாகவும் இருந்தது.சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர், கடந்த 23-ம் தேதி தொடங்கியது. முதல் நாள், ஏற்காடு தொகுதி உறுப்பினர் பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சில நிமிடங்களிலேயே முடிந்தது.

மறுநாள், இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிய பஸ்களில் அதிமுக சின்னம் இருப்பதாக திமுகவினர் எழுப்பிய புகாரால் 3-ம் நாள் பேரவை அமளி துமளியானது. சபைக்குள் பேரவைத் தலைவர் அனுமதியின்றி, பஸ் படங்களைக் காட்டி முழக்கம் எழுப்பியதால், திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை அவை கூடியபோதும் சிறிய பஸ் பிரச்சினை பூதாகரமாக வெடித்ததில், திமுகவினர் மீண்டும் வெளியேற்றப்பட்டனர். செவ்வாய்க்கிழமை, அதிமுக உறுப்பினர் விஜய பாஸ்கர் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது. திமுகவினரும் அவர்களைத் தொடர்ந்து தேமுதிகவினரும் வெளியேற்றப்பட்டனர். திமுகவினர் 3-வது முறையாக வெளியேற்றப்பட்டதால் கூட்டத் தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தேமுதிக உறுப்பினர்களில் பாதி பேர் அவைக்கு பல நாட்கள் வரவில்லை. அதிருப்தி உறுப்பினர்கள் நாள் தவறாது வந்தனர். பேச வாய்ப்பு கிடைத்தவர்கள், முதல்வரைப் புகழ்ந்து தள்ளினர். தொடர்ந்து வெளியேற்றப்பட்டதாலோ என்னவோ, தேமுதிக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே தோழமை உணர்வு அதிகரித்ததை சபை வளாகத்தில் அவர்கள் கலகலப்பாக பேசிக்கொண்டதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

மத்திய அமைச்சரை குறைகூறி அமைச்சர் முனுசாமி பேசிய போது, காங்கிரசுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் குரல் கொடுத்ததையும், அதற்கு அமைச்சர், "பழைய நட்பை புதுப்பிக்கப் பார்க்கிறீர்களா" என்று கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இந்தக் கூட்டத் தொடர், எதிர்க்கட்சிகள் இடையே ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது. இந்தத் தொடரில் பாமக உறுப்பினர்கள் பங்கேற்கவே இல்லை. காங்கிரஸ் கட்சி, வழக்கமாக காட்டும் எதிர்ப்பை இந்த முறை ஏனோ காட்டவில்லை.

எதிர்பார்த்தது போலவே, மணல் கொள்ளை பிரச்சினையில் நீண்ட விளக்கத்தை அரசு அளித்தது. கடைசி நாளில் அனுபவசாலியான பண்ருட்டி ராமச்சந்திரன், பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி சாதுரியமாக பேசிய விதம், எதிர்ப்பை சம்பாதிக்காமல் பேசுவது எப்படி என மற்ற எதிர்க்கட்சியினருக்கு பாடம் கற்பிப்பதுபோல் இருந்தது.

வெளியேறாத பண்ருட்டி ராமச்சந்திரன்...

தங்கள் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகன் தெரிவித்த கருத்துக்கு பதில் கூற வாய்ப்பு தராததால் அவையை விட்டு தேமுதிக உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர். ஆனால், அக்கட்சியின் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியேறாமல் அவையிலேயே இருந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் துணை மானிய கோரிக்கை மீது பேசிய தேமுதிக (அதிருப்தி) உறுப்பினர் தமிழழகன், முதல்வர் ஜெயலலிதாவை வெகுவாக புகழ்ந்து பேசினார். அப்போது மறைமுகமாக தேமுதிகவை சாடினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தேமுதிக உறுப்பினர்கள், தங்களுக்குப் பேச வாய்ப்பு தரவேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் வாதிட்டனர். அனுமதி மறுக்கப்பட்ட தால், அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறிவிட்டு, அதிருப்தி உறுப்பினர்களைத் தவிர்த்து, மற்ற தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேறினர்.

ஆனால், அக்கட்சியின் சட்டப்பேரவை துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெளியேறவில்லை. அருகில் இருந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்தரராஜனிடம் அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மொத்தம் உள்ள 27 தேமுதிக எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் ஏற்கனவே அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமாக, அதாவது பத்து பேர் இருந்தால் போட்டி தேமுதிக உருவாகிவிடும். அப்படி ஏதும் விரைவில் நிகழுமோ என்ற எதிர்பார்ப்பு தற்போது பரவலாக எழுந்துள்ளது.

ஒரே நாளில் 10 மசோதாக்கள் நிறைவேற்றம்...

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை சீர்திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்கள் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் இசை, கவின்கலை, நிகழ்த்துக் கலை, சிற்பக்கலை மற்றும் தொடர்புடைய புலன்களில் கல்வியாளர்களின் கருத்துக்களை பரிமாற்றம் செய்யவும், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் ஏனையவற்றுக்கான பொதுவான அமைப்பு ஏற்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் தோற்றுவிப்பது தொடர்பான மசோதா நிறைவேறியது.

புதிய காவல் சட்டம், திண்டுக்கல், தஞ்சை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது, குறைந்த கட்டண தங்கும் வசதி கொண்ட ஓட்டல்களுக்கு சலுகை அளிப்பது உள்பட மொத்தம் 10 மசோதாக்கள் ஒரே நாளில் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இதில், காவல் சட்ட மசோதா மீது நீண்ட விவாதம் நடந்தது. பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர். அதற்கு முதல்வர் பதிலளித்தார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x