

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மருத்துவ வசதி மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திங்கட்கிழமை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்
கடந்த 5 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 8.35 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் உயர்த்தப்பட்டுள்ளது. பால் குளிர்விக்கும் அறைகளின் திறன் நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் குளிர்விக்கும் அறைகள் பல்வேறு பால்பண்ணைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலையில் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் திறனுள்ள பால் பவுடர் தொழிற்சாலை, அமைக்கப்பட்டுள்ளது. எனவே தான், நடப்பு ஆண்டில், பால் கொள்முதல் சராசரியாக 29.32 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. கடந்த 27.6.2016 அன்று 31.39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பால் வளம் சம்பந்தமாக பின்வரும் புதிய அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1. பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பால் உறைகள் தயாரிக்க தனியாரிடமிருந்து பாலிதீன் பிலிம் கொள்முதல் செய்யப்படுகிறது. சில சமயங்களில் இவை தரமற்றதாக உள்ளன. இதனை தவிர்க்கும் பொருட்டு, தரமான பாலிதீன் பிலிம்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டையில் வருடத்திற்கு 5,000 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஒரு பாலிதீன் பிலிம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ. 82 கோடியே 54 லட்சம் செலவில் நிறுவப்படும்.
2. நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பால்பண்ணையின் திறனை மேம்படுத்தத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், நவீன பாலகங்கள் அமைக்கப்படும். குளிர்சாதன வாகனங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் ரூ.4 கோடியே 82 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
3. சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பால்பண்ணையில் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நுகர்வோர் வசதியை கருத்தில் கொண்டு, ஆறு மாதம் வரை பயன்படுத்தக் கூடிய வகையில், ஹெலிகேப் அப்ளிகேட்டர் வசதியுடன் ஒரு லிட்டர் டெட்ரா பேக் பால் பாக்கெட்டுகள் தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் ரூ.27 கோடியே 51 லட்சம் செலவில் நிறுவப்படும்.
4. மதுரை பால்பண்ணையில் நாளொன்றுக்கு சராசரியாக 2.60 லட்சம் லிட்டர் பால் கையாளப்படுகிறது. இப்பால்பண்ணையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும், எரிசக்தியை சேமிக்கவும்; மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ரூ.13 கோடி செலவில், கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், சூரிய ஒளி செறிவூட்டி, மின்மாற்றிகள் மற்றும் வெண்ணெய் சிப்பம் கட்டும் இயந்திரம் ஆகியன நிறுவப்படும்.
5. சென்னை மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் துறையின் கட்டுப்பாட்டில் 452 அரசு குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகள் அரசுத்துறை பணியாளர்கள் மற்றும் ஆவின் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேற்படி குடியிருப்புகள் 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டவை ஆகும். அவை தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே, இந்த குடியிருப்புகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பழுது பார்த்து புனரமைக்கப்படும்.
6. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஓய்வு பெற்ற பணியாளர், வருங்கால ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் தற்போது பெற்று வரும் ஓய்வூதியத் தொகையுடன், கூடுதலாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,500 பெறும் வகையில், புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், ஓய்வூதியத் தொகையில் 50 சதவீதத் தொகை குடும்ப ஓய்வூதியமாக அனுமதிக்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.27 கோடி செலவு ஏற்படும்.
7. அரசு துறை பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போல, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மருத்துவ வசதி மற்றும் மருத்துவக் காப்பீடுத் திட்டம் நடைமுறைபடுத்தப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.1 கோடியே 69 லட்சம் செலவு ஏற்படும்.
இவ்வாறு பேரவையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.