சிசேரியன் செய்ய டி.ஜி.ஓ. படிக்காத டாக்டர்களை வற்புறுத்துவதா? - மதுரை அரசு மருத்துவர்கள் குற்றச்சாட்டு

சிசேரியன் செய்ய டி.ஜி.ஓ. படிக்காத டாக்டர்களை வற்புறுத்துவதா? - மதுரை அரசு மருத்துவர்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

டி.ஜி.ஓ. படிக்காத டாக்டர்களை சிசேரியன் செய்யச் சொல்லி அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்தில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

“தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் முதல் லேப் டெக்னீஷியன்கள்வரை அனைத்துத் தரப்பினரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். இதற்குக் காரணம், தேசிய ஊரக சுகாதார இயக்க மேலாண்மை இயக்குநரும், தமிழக சுகாதாரத் திட்ட இயக்குநருமான பங்கஜ்குமார் பன்சால் தான்.

அரசாணை மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களை இடமாற்றம் செய்வது, சஸ்பெண்ட் செய்வது என்று அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.

உதாரணமாக, உசிலம்பட்டியில் உள்ள ஒரு மருத்துவர் ஒரு மாதத்தில் வெறும் 8 சிசேரியன்கள் தான் செய்துள்ளார் என்று அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்துள்ளார்.

இதேபோல, தலைமை சிவில் சர்ஜன் முதல் செவிலியர்கள் வரை பணித்திறன் சரியில்லை என்று தண்டிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். இதுபோன்ற நிர்ப்பந்தங்கள் காரணமாக, மருத்துவப் பணியாளர்கள் மட்டுமின்றி, நோயாளிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

டி.ஜி.ஓ., படிக்காத எம்.பி.பி.எஸ். டாக்டர்களுக்கு வெறுமனே 6 மாத பயிற்சி மட்டும் கொடுத்துவிட்டு, சிசேரியன் செய்யச் சொல்கிறார்கள். 6 மாத பயிற்சி அளித்து சில டாக்டர்களை மயக்க மருந்து கொடுக்கச் சொல்கிறார்கள்.

விருப்பமில்லாத, தங்களால் இதைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்று கருதுகிற வர்களை இதுபோன்ற பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதை எல்லாம் மீறி கட்டாயப் படுத்துகிறார்கள். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இந்தப் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்பக் கோரியும் வருகிற 27-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட உள்ளோம்.

அதைத் தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவ உதவி யாளர்கள், கிராமச் செவிலியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்” என்றார்.

செய்தியாளர்களுடனான இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்பின் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in