

மீஞ்சூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரை நூற்றாண் டை கடந்த ஆதி திராவிடர் நல ஆரம்ப பள்ளிக்கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் வலியுறுத்தியுள் ளனர். அதற்காக விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ளது மேலூர் கிராமம். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைக் கொண்ட கிராமம் ஆகும். 1959, அக்டோபர் 9-ல் சென்னை மாகாணத்தின் முதல்வராக காம ராஜர் இருந்தபோது, மேலூரில் அரிஜன தொடக்கப்பள்ளி அமைக் கப்பட்டது. பள்ளியை அப்போதைய விவசாயத்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமான எம்.பக்தவச்சலம் திறந்து வைத்தார்.
சுமார் 10 ஆயிரம் சதுரடி பரப் பளவில் ஓட்டுக் கட்டிடமாக அமைக் கப்பட்ட இந்த தொடக்கப் பள்ளி தான், மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்க உறுதுணை யாக இருந்தது. இந்த பள்ளியில் படித்த பலர் தற்போது அரசு துறை கள் உட்பட பல்வேறு துறைகளில் பொறுப்பு வகிக்கின்றனர்.
தற்போது இந்த பள்ளி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. பள்ளிக்கென கட்டப்பட்ட கட்டிடத்தின் வயது 57-ஐ தாண்டிவிட்டது. இதனால், மேற்கூரைகள் சேதமடைந்தும், சுவர்கள் விரிசல் அடைந்தும் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சுறுத்தும் வகையில் கட்டிடம் இருப்பதால் எந்த நேரத் திலும் இடிந்து விழலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக் கின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத் திடம் பல முறை கோரிக்கை வைத் தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயந்து பெற்றோர்கள் வருமானத்துக்கு மீறி 2 கிமீ தூரத்தில் மீஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
இதனால், மாணவர் எண் ணிக்கை குறைந்தது. கடந்த கல்வி ஆண்டில் 3 மாணவர்களே பள்ளிக்கு வந்தனர் என்பதுதான் சோகம். இதனால் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முயற்சி எடுத்து 40 மாணவர்கள் வரை தற்போது பள்ளியில் சேர்த்துள்ளனர். அதே நேரம் பள்ளியின் பலவீனமாக கட்டிடம் தொடர்ந்து அச்சுறுத்திய படியே உள்ளது.
எனவே, இந்தக் கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
இதுகுறித்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘மேலூர் பள்ளிக் கட்டிடம் மட்டுமல்லாமல், மீஞ்சூர் பகுதியில் மேலும் சில பழமையான பள்ளி கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எங்களின் கவனத்துக்கு வந்துள் ளது. அதுதொடர்பாக உரிய ஆய்வு கள் நடத்தி, அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்று, விரைவில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.