

தெற்கு ரயில்வே சார்பில் சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிவதற்கான கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. தெற்கு ரயில்வே தலைமை செயல் மேலாளர் எஸ்.அனந்தராமன் வரவேற்றார். தலைமை வர்த்தக மேலாளர் அஜித் சக்சேனா, மண்டல ரயில்வே மேலாளர் அனுபம் சர்மா, பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியன் ரயில்வே மகத்தான பங்காற்றி வருகிறது. பெரும்புதூர், ஒரகடம் பகுதியில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்களை ரயில்கள் மூலம் கொண்டு செல்வதற்காக வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் கடந்த 22-ம் தேதி ஆட்டோ ஹப் தொடங்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் அனைத்தும் ரயில்கள் மூலம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு, பிற மாநிலங்களுக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும். இதனால் சாலை மார்க்கத்தில் நெரிசல் குறையும்.
இதைத்தவிர, பெட்ரோலிய பொருட்கள், சிமென்ட், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவையும் சரக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படும். கடந்த ஆண்டு சரக்கு ரயில்கள் மூலம் 33.7 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டது. இதன் மூலம், 2 ஆயிரத்து 857 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு 38.5 மில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. சென்னை சென்ட் ரல் புறநகர் ரயில் நிலையத்தில் புதிதாக 2 நடைமேடைகள் அமைப் பதற்கான பணிகள் இன்னும் 3 மாதத்துக்குள் நிறைவடையும்.
இவ்வாறு வசிஷ்ட ஜோரி கூறினார்.