

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அத்துறைகளின் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:
தமிழகத்தில் இருந்து வந்த பூரண மதுவிலக்கு 1971-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது நீக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக இளைஞர்கள் மதுவால் கெட்டுப் போனதற்கு இதுவே காரணம்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரே நாளில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என கருணாநிதி அறிவித்தார். சில நாள்களில் இதனை மாற்றிக் கொண்டு மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் கொண்டு வருவோம் என்றார்.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் முதல்வராக பதவியேற்ற முதல் நாளே 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுக்கடைகள் திறந்திறக்கும் நேரத்தில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டது. எது சாத்தியமோ அதனை செய்து காட்டியுள்ளார். தமிழகத்தில் மதுவிலக்கு யாரால் ரத்து செய்யப்பட்டது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
1971 ஆகஸ்ட் மாதத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதியால் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுவகைகள், சாராயம் மற்றும் கள் விற்பனை கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன.
2007-ம் ஆண்டு சட்டப்பேரவையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என பல்வறு கட்சிகளின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு பதிலளித்த அன்றைய முதல்வர் கருணாநிதி, ‘‘கள்ளச்சாராயம் என்பது ஒழிக்க முடியாத ஒன்று. கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமானால் மற்ற நாடுகளை விட நாம் நல்ல சரக்குகளை தயாரிக்க வேண்டும். வேறுவழியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. இதற்கு இன்றைய உலக நிலை, உலகப் பண்பாடு, உலக கலாச்சாரமே சாட்சியாக உள்ளது’’ என்றார்.
மதுவிலக்கு குறித்து கருணாநிதியின் உண்மையான கருத்து இதுதான். என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவதல் நான் உறுதியாக இருக்கிறேன். அதன் அடிப்படையில் தான் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும், சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டது. 500 மதுபானக் கடைகளை மூடப்பட்டன. மதுவிலக்கு விஷயத்தில் அதிமுக அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.