

திருவாரூர் அருகே உள்ள கடம்பங்குடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய ஆழ்குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, குழாய் அமைக்கும் பணியை நேற்று தடுத்து நிறுத்தினர்.
கச்சா எண்ணெய் எடுப்பதற்காக திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள ஆழ்குழாய்களால், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், விவசாயம் அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும், அந்நிறுவனம் காவிரி டெல்டாவை விட்டு வெளியேற வேண்டுமென்றும் வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு மீண்டும் ஆழ்குழாய் பதிக்கும் பணிக்காக, இரும்புக் குழாய், கருவிகள் ஆகியவை லாரிகளில் நேற்று கொண்டுவரப்பட்டன. இதை அறிந்த அப்பகுதி மக்கள், லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டாட்சி யர் தங்கமணி மற்றும் போலீஸார், கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
குழாய் அமைப்பது தொடர்பாக நாளை (ஜூன் 13) மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், உரிய முடிவு மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.