

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதம்:
கு.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை):
கடந்த14 ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்க வேண்டும். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறையில் உள்ள பாட்சா உள்ளிட்டோருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும்.
தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி):
தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவோரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார். அந்த படத்தை நான் வாங்கிப் பார்த்தேன். அது ஒரு வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்ததாகும். போராட்டத்தில் யாரும் பின்லேடன் படத்தை வைத்திருக்கவில்லை. ஒசாமாவை தமிழர்கள் யாரும் ஆதரிக்கவில்லை.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
பின்லேடன் படம் ஒட்டப்பட்ட ஸ்கூட்டி வாகனம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அது குறித்த விவரங்களை எனது பதிலுரையில் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.