தமிழக தேர்தல் துறை அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் சந்திப்பு: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், தேசிய வாக்காளர் தினம் குறித்து ஆலோசனை

தமிழக தேர்தல் துறை அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் சந்திப்பு: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், தேசிய வாக்காளர் தினம் குறித்து ஆலோசனை
Updated on
1 min read

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரி களுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் சென்னையில் திடீர் ஆலோசனை நடத்தினார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் நேற்று திடீரென சென்னை வந்தார். கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில், தமிழகத் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி டாக்டர் சந்தீப் சக்சேனா, இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஏ.சிவஞானம் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. 2015 ஜனவரியை தகுதியாகக் கொண்டு முடிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். வரும் ஜனவரி 5-ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியலை பிழைகள் இன்றி வெளியிடுவதற்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதேபோல், ஜனவரி 25-ம் தேதி ஐந்தாவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, புதிதாக பதிவு செய்துள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் வண்ண வாக்காளர் அட்டை வழங்குவதற்கும், வாக்காளர் பட்டியலில் புதிய சாப்ட்வேர் மூலம் பிழைகள் மற்றும் போலிகளைக் களைவது குறித்தும் முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டுள்ள ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்தும், அவர் ஆலோசனை நடத்தியதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in