Published : 16 Apr 2017 10:49 AM
Last Updated : 16 Apr 2017 10:49 AM

‘குதிரை வீரன்’ உருவத்துடன் அதியமான் பெயர் பொறித்த நாணயம்: நாணயவியல் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தகவல்

தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்ததாவது:

சங்ககால குறுநில மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி. அவனது ஊர் தகடூர் (தற்போதைய தருமபுரி). அவன் மழவர் இனத்தைச் சேர்ந்தவன். ‘குதிரைகளைக் கொண்ட மழவர், குறும்படை மழவர், கருங்கண் மழவர், போர்த் திறன் கொண்ட மழவர்’ என சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிகிறோம்.

தற்போது, பாகிஸ்தானில் ஓடும் ஜீலம், சினாப், ரபி ஆகிய நதிகளின் இடைப்பட்ட மிக வளமான பகுதியை ‘மாலவாஸ்’ என்ற பழங்குடியினர் தொன்மைக் காலத்தில் ஆட்சி செய்துள்ளனர். அலெக்சாண்டர் படையெடுத்தபோது, போரில் தோல்வியுற்ற இவர்கள் தங்கள் நாட்டைவிட்டு பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். அவர்களுக் கும், அதியமானின் முன்னோருக்கும் தொடர்பு இருக்கலாம் என சில வரலாற்று ஆசிரியர்கள் கூறும்போதிலும், அதை நிரூபிக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இதற்கிடையில், சங்ககால சேர, சோழ, பாண்டியர், மலையமான் நாணயங்கள் கடந்த 30 ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் 2 அதியமான் நாணயங்களை வெளியிட் டுள்ளேன். இந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு கிடைத்த நாணயம் ஒன்றை சுத்தப்படுத்தி ஆய்வு செய்தபோது, அதன் சின்னங்கள் தெரிந்தன.

நாணயத்தின் முன்புறத்தில் இடதுபக்கம் அழகிய குதிரை. அதன் மீது கயிற்றைப் பிடித்தபடி வீரன் அமர்ந்திருக்கிறான். கிரேக்க வீரர்கள் போன்ற தொப்பியை அணிந்துள்ளான். வலப்பக்கத்தில் மேலிருந்து கீழ் நோக்கி ‘தமிழ்–பிராமி’ எழுத்து முறையில் ‘அதியமான்ஸ’ என்ற 6 எழுத்துகளும், அதன் நடுவே ‘திருவஸ்தம்’ என்ற மங்கலச் சின்னமும் உள்ளது. தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்கள், சங்ககால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் இச் சின்னத்தைக் காணமுடியும்.

நாணயத்தின் பின்புறம், நின்ற நிலையில் ஒரு புலி வலதுபக்கம் நோக்கி நிற்கிறது. அதற்கு மேல் ‘ம’ என்ற ‘பிராமி’ எழுத்து தெரிகிறது. வலது விளிம்பில் மேலிருந்து கீழ்நோக்கி ‘அதியமான்ஸ’ என பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இரா.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x