

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 3--வது வாரத்தில் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் முதல்முறையாக நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் பணிகள் மும்முரம்:
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.
அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசியலில் பரபரப்பும் குழப்பமும் நிலவியது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பட்ஜெட் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருவதால், தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.