

குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்பாக, முதியவர்களின் சிரமங்களை தவிர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் கண்டியன்கோயிலைச் சேர்ந்த ரா.கதிரேசன் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில், குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதம் முதல் பொருள் வழங்கப்படும் என்று, கடை ஊழியர்களும் உறுதியாக கூறுகின்றனர். இதனால், பல குடும்பங்களில் தனியாக குடும்ப அட்டையுடன் வாழும் முதியவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆதார் முகாம் அமைந்திருக்கும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று, காத்திருந்து ஆதார் புகைப்படம் எடுக்க முடியாத நிலையில் முதியோர் பலர் உள்ளனர். அதே சமயம், வீட்டில் தனியாக வாழும் முதியவர்கள், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பொருட்களை நம்பியே வாழ்கின்றனர்.
எனவே, அவர்களின் நிலையை கருத்தில்கொண்டும், மன உளைச்சலை குறைக்கும் வகையிலும் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையிலோ அல்லது அருகே உள்ள கடையிலோ 2 நாட்கள் ஆதார் சிறப்பு முகாம் அமைத்து புகைப்படம் எடுத்தால் மட்டுமே, முதியோர்களின் குடும்ப அட்டைகளில் ஆதார் எண் இணைப்பு சாத்தியம். இதுதொடர் பாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கடந்த மாதம், மாவட்டம் முழுவதும் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. முதியவர்களுக்காக, நியாயவிலைக் கடையில் சிறப்பு முகாம் நடத்த சாத்தியம் இல்லை. ஏனென்றால், மாவட்டத்தில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன.
தற்போது வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் ஆதார் புகைப்படம் எடுப்பதற்கான புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 30 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில், இப்பணி தொடர்ந்து நடைபெறும்.
எனவே, விடுபட்டுள்ள வயதான முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று ஆதார் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.