

சென்னையில் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் போன்று மீண்டும் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட தமாகா தலைவர் வி.எம்.மோகன்ராஜ், மதுக்கரை ஒன்றிய இளைஞரணித் தலைவர் வி.எம்.முத்துராஜ், மாவட்ட துணைத் தலைவர் வி.அழகிரி, மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.வரதராஜன், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியச் செயலாளர் பாக்கியம், தேமுதிக பேரூராட்சி கவுன்சிலர் ரா.அமிர்தராஜ் உட்பட தேமுதிக, மதிமுக, தமாகாவைச் சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் நேற்று சென்னை அண்ணா அறிவால யத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்மணி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங் களில் சென்னையில் பெரும் மழை, வெள்ளம் ஏற்பட்டது. பல்லாயிரக் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்தனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந் தனர்.
அதுபோன்ற நிலை மீண்டும் சென்னையில் வந்துவிடக் கூடாது. மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது, இதுவரை செய்யப்பட்ட பணிகளின் நிலை என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பேரவையில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டைப்போல வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.