Last Updated : 05 Jan, 2017 12:26 PM

 

Published : 05 Jan 2017 12:26 PM
Last Updated : 05 Jan 2017 12:26 PM

நொய்யல் இன்று 21: மண்ணரை முதல் கத்தாங்கண்ணி வரை சிதைந்த அணைகள்

பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

கோவையில் 68 கிலோமீட்டர், திருப்பூரில் 36, ஈரோட்டில் 24, மீண்டும் திருப்பூரில் 20, இறுதியில் கரூரில் 22 கிலோமீட்டர் பயணித்து நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது நொய்யல் நதி.

இதில், ஒரத்துப்பாளையம் அணைப் பகுதியில் 30 கிலோமீட்டர் தொலைவுக்குள் வரும் நீர்நிலைகள் சாயக் கழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அணையின் மேல் பகுதியில் உள்ள மண்ணரை, முதலிபாளையம், அணைப்பாளையம், கத்தாங்கண்ணி கிராமங்களில் உள்ள அணைக்கட்டுகள், குளங்களின் நிலை மிகவும் மோசம்.

திருப்பூர் நகரிலிருந்து ஊத்துக்குளி சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்ணரைக்கு அருகில், பாறப்பாளையம் செல்லும் பிரதான சாலையின் ஓரமுள்ளது மண்ணரைக் குளம். இங்கு, சாக்கடை, சாயக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இங்குள்ள குளத்திலிருந்து அணைக்கட்டுக்குச் செல்லும் ஆறும், வாய்க்காலும் இடிபாடுகள், பாறைப் பள்ளங்களுடன் பின்னிப்பிணைந்தே சென்றது.

அணையைத் தேடி…

ஆற்றின் இரு கரைகளிலும் பெரிய சாலைகள், அதற்கு 2 இணைப்பு பாலங்கள், இடிபாடுகளுடன் கூடிய பழைய தரைப்பாலம், ஆற்றங்கரையோரம் உள்ள தியேட்டர், மின் மயானம், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள் தெரிகின்றன. ஆனால், அணை மட்டும் தெரியவில்லை. சுமார் 2 மணி நேரத் தேடலுக்குப் பிறகு, ஆற்றின் கரையோர சாலைகளுக்கு கீழே அணை இருந்தது தெரியவந்தது. அணையின் கதவுகள் அடைத்து, குப்பை மேடாகிக்கிடந்தது. ஆற்றின் நீர் துர்நாற்றத்துடன் இருந்தது.

இதுகுறித்து மண்ணரை ஊராட்சி முன்னாள் தலைவர் ஏ.சுப்பராயன் கூறியது: 1970-ம் ஆண்டிலிருந்து 1986 வரை நான் மண்ணரை ஊராட்சித் தலைவராக இருந்தேன். அப்போதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆற்றில் குளிப்போம். மிகவும் சுத்தமாக இருக்கும். பாசனமும் முழுமையாக நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளம், வாய்க்காலை சுத்தம் செய்வோம். தடையின்றி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

பிறகு, சலவைப் பட்டறை தண்ணீர் வந்தது. தொடர்ந்து, சாயக் கழிவுநீர் வர ஆரம்பித்தது. இதனால் ஆறு பாழாகத் தொடங்கியது. ஆற்றின் 2 கரைகளிலுமே புதிய குடியிருப்புகள், குடிசைகள் ஆயிரக்கணக்கில் பெருகின. அதற்கேற்ப கரையை உயர்த்தி, சாலையை அமைத்தனர். குடியிருப்புவாசிகள் குப்பை, கழிவுகளை வாய்க்கால் மற்றும் ஆற்றில் கொட்டத் தொடங்கினர். அதனால் ஆற்றின் பரப்பு குறைந்தது. வாய்க்காலும் ஆங்கங்கே இடிந்து, மேடும் பள்ளமுமாக மாறி, இருக்கும் இடம் தெரியாமல்போய்விட்டது.

இப்போதும் மண்ணரையில் கொஞ்சம் விவசாய நிலங்கள் உள்ளன. மழைக் காலங்களில் மட்டும் சோளம், தீவனப்புல் வளர்ப்போம். அப்போது, விவசாயிகள் இணைந்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனுமதியுடன் வாய்க்காலை சுத்தம் செய்து, குளத்துக்கு தண்ணீர் விடுகிறோம். அவ்வாறு மழைக் காலத்தில் குளத்தில் நிரம்பும் நீர்தான், ஆண்டுமுழுவதும் இங்குள்ள நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களும், கொசுத்தொல்லை, சுகாதாரக்கேடு என்று மனு அளிப்பதால், மாநகராட்சி நிர்வாகமும் ஆற்றின் வாய்க்காலை அவ்வப்போது சுத்தம் செய்கிறது என்றார்.

முதலிபாளையம் அணைக்கட்டு

நல்லூர் அருகேயுள்ள முதலிபாளையம் அணைக்கட்டை காசிபாளையம் அணை, முதலிபாளையம் அணை என்றும் அழைக்கின்றனர். மண்ணரை அணையிலிருந்து நொய்யல் செல்லும் பாதையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை, நகருக்கு வரும் பிரதான சாலையின் ஓரத்திலேயே வளைந்து காணப்படுகிறது.

இந்த அணையின் வாய்க்காலுக்கு 2 கதவுகள் உள்ளன. அங்கிருந்து சிறிது தொலைவிலேயே வாய்க்கால் மீது தனியார் நிறுவனம் பாலம் அமைத்துள்ளது. இதனால், வாய்க்கால் கதவுகள் மண்மூடிக் காணப்படுகின்றன. மேலும், ஆற்று நீர் வாய்க்காலுக்குச் செல்லாமல், ஆற்றுக்கே திருப்பிவிடப்பட்டு, நுரை ததும்பி சென்று கொண்டுள்ளது.

அடுத்துள்ள அணைப்பாளையம் அணையும், சாக்கடை, சாய நீர் கலந்தும், இடிபாடுகளுடனும் காணப்படுகிறது. அதன் நீரும் வாய்க்கால்களுக்கு செல்லாமல் ஆற்றிலேயே திருப்பி விடப்பட்டிருந்தது. அதுவும், சலவை, சாயக்கழிவுகள், சாக்கடை கலந்து செல்கிறது.

அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கத்தாங்கண்ணி கிராமம். இங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்த பகுதி காணப்படுகிறது. அந்தப் பகுதியைத்தான் குளம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

அங்கிருந்து மேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் பழநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைக் கடந்து சென்றால் அணைக்கட்டு தென்படுகிறது. இந்த அணையும் சிதிலமடைந்துக் காணப்படுகிறது.

அணையின் வலது கரை ஓரம் பிரியும் வாய்க்கால் மதகுகள் மண்ணால் மூடப்பட்டு, முற்றிலும் தண்ணீர் தடைபட்டிருந்தது. அதையும் மீறி ஒரு மதகின் கீழ்பகுதியில் சின்ன இடைவெளியில் வாய்க்காலுக்கு கொஞ்சம் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது.

அந்த வாய்க்கால் பாதையில் நீலம், பச்சை, செம்பழுப்பு நிறத்தில் சாயப் படிமங்கள் காட்சியளித்தன. அதன் கரையில் இருந்த பனை, தென்னை மரங்கள் கருகிக் கிடக்கின்றன.

பம்ப்செட் மூலம் விவசாயம்

அப்படியிருந்தும் வழியில் மோட்டார் பம்ப்செட் வைத்து பழநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள், நிலங்களுக்கு இந்த அசுத்த நீரைப் பாய்ச்சிக்கொண்டிருந்தன.

இதுகுறித்து கத்தாங்கண்ணியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் கூறும்போது, “இங்கே 100 குடும்பங்களுக்கு மேல் உள்ளன. 600 ஏக்கருக்கு நெல், மஞ்சள், கரும்பு, பருத்தி என 3 போகம் விளைந்தது. சாயப்பட்டறை நீரால் நிலம் பாழாகி 20 ஆண்டுகளாகிவிட்டது. நஷ்டஈடாக ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் கொடுத்தனர். இதனால், பலர் விவசாயத்தைக் கைவிட்டு, திருப்பூரில் வேலைக்குச் சென்றனர். எனக்கு விவசாயம் மட்டும்தான் தெரியும். சோளம், தென்னை, தீவனப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளேன். கிணற்றுத் தண்ணீரைப் பாய்ச்சினால் பயிர்கள் கருகிவிடுகின்றன. ஆற்று நீரைப் பயன்படுத்தினால் ஓரளவுக்கு பயிர்கள் வளர்கின்றன. தண்ணீரின் தன்மையும் 20 ஆண்டுகளுக்கு இருந்ததுபோல தற்போது மோசமாக இல்லை. ஆனால், தண்ணீர் விட அதிகாரிகள் மறுக்கின்றனர். அதையும் மீறி அதிகாரிகளிடம் கெஞ்சிக்கேட்டு, வாய்க்காலில் தண்ணீரைப் பாய்ச்சுகிறோம். குளத்தில் தேக்கி வைக்கமாட்டோம் என உத்தரவாதம் கொடுத்துவிட்டு, நீரைப் பயன்படுத்துகிறோம்.

அதிகாரிகளுக்குப் பயந்து குளத்தில் நீரைத் தேக்காமல், வாய்க்காலில் மட்டும் நீரைப் பாய்ச்சுகிறோம். எனினும், பழநாய்க்கன்பாளையத்தைச் சேர்ந்தவர்களும் போட்டிபோட்டு தண்ணீர் எடுக்கிறார்கள். ஆற்றில் மழைக் காலத்தில்தான் தண்ணீர் அதிகம் வரும். அந்த நேரத்தில் மதகைத் திறந்து, குளத்தில் தேக்கினால் வருடத்தில் பாதி நாட்களாவது பயன்படும். தண்ணீரைத் தேக்கக் கூடாது என்ற நிலையில், மற்ற நாட்களில் வாய்க்கால் தண்ணீரையும் பழநாய்க்கன்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்டால், எங்களது நிலை என்ன ஆவது?” என்றார்.

பழநாய்க்கன்பாளையம் விவசாயி சுப்பிரமணியம் கூறும்போது, “எனது நிலத்துக்கு அருகிலேயே அணை உள்ளது. அதனால், கிணற்று நீர் மோசமாக உள்ளது. எங்கள் முன்னோருக்கு பருத்தி, நெல் ஆகியவற்றை முப்போகம் விளைவிக்க தண்ணீர் கொடுத்த கிணறு, கடந்த 20 ஆண்டுகளாக மோசமாகிவிட்டது. நீரில் சாயம் கலந்து, துர்நாற்றத்துடன் உள்ளது. பம்ப்செட் மூலம் ஆற்று நீரைப் பயன்படுத்தி தண்ணீரை எடுத்து பாசனத்துக்குப் பயன்படுத்தினால், ஓரளவுக்கு சோளம் விளைகிறது. நிலமும் பாழ்படாமல் உள்ளது. ஆனால், பம்ப்செட் வைக்கவும், அதற்கு குழாய்கள் அமைக்கவும் அனுமதி வாங்க பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. நாங்கள் எப்படித்தான் பிழைப்பது?” என்றார்.

இந்த கத்தாங்கண்ணி அணை, குளம் அமைந்திருக்கும் கிராமங்களிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது ஒரத்துப்பாளையம் அணை.

மண்ணரை, முதலிபாளையம், அணைப்பாளையம், கத்தாங்கண்ணி கிராம மக்களின் நிலை இப்படி என்றால், ஒரத்துப்பாளையம், சின்னமுத்தூர், ஆத்துப்பாளையம் விவசாயிகளின் இன்றைய நிலை என்ன?

பயணிக்கும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x