

மெரினாவில் காணும் பொங்கல் கொண்டாட வந்த கூட்டத்தில் காணாமல்போன 7 வயது சிறுமியை அவரது வீட்டுக்கே அழைத்து வந்து ஒப்படைத்தார் ஒரு முஸ்லிம் இளைஞர்.
சென்னை திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ராஜா (16), விஜயலட்சுமி (7) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். காணும் பொங்கல் கொண்டாட சிவக்குமார் தனது குடும்பத்துடன் மெரினாவுக்கு வியாழக்கிழமை வந்தார்.
ராஜாவின் கையை சிவக்குமா ரும், விஜயலட்சுமியின் கையை கலைச்செல்வியும் பிடித்துக் கொண்டு மெரினா கடற்கரை கூட்டத்தில் நடந்தனர். அப்போது செல்போன் அழைப்பு வரவே விஜயலட்சுமியின் கையை விட்டுவிட்டு செல்போனில் பேசி னார் கலைச்செல்வி. அப்போது கலைச்செல்வி போலவே இன்னொரு பெண் செல்ல இதுதான் தனது அம்மா என்று அந்த பெண்ணின் பின்னாலே நீண்ட தூரம் சென்றுவிட்டார் விஜயலட்சுமி. அவ்வளவுதான் லட்சக்கணக்கானோர் திரண்ட மணல் வெளியில் பெற்றோரும், சிறுமியும் பிரிந்துவிட்டனர்.
வேடிக்கை பார்த்துக் கொண்டே நீண்ட தூரம் சென்ற பின்னர் தாயை பிரிந்து வந்து விட்டதை அறிந்து விஜயலட்சுமி அழ ஆரம்பித்து விட்டார். பெற்றோரும் விஜயலட்சுமியை தேடினர். பின்னர் அங்கிருந்த காவல் உதவி மையத்தில் சிவக்குமார் புகார் தெரிவித்தார். காவல் துறையினரும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில், ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்த விஜய லட்சுமியை, குடும்பத்துடன் மெரினாவுக்கு வந்திருந்த ஒருவர் பார்த்து விவரம் கேட்டார். ஆனால் பதில் சொல்லாமல் தொடர்ந்து அழுத விஜயலட்சுமியின் நிலைமையை உணர்ந்து, தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். விஜயலட்சுமியின் அழுகையை நிறுத்தி, இரவில் வீட்டில் தங்க வைத்து மறுநாள் காலையில் வீட்டின் முகவரியை கேட்டபோது தெளிவாக கூறியிருக்கிறார் விஜயலட்சுமி. உடனே மோட் டார் சைக்கிளில் அவரை ஏற்றிக் கொண்டு அவரது வீட்டுக்கு செல்ல, குழந்தையை காணா மல் பரிதவித்துக் கொண்டி ருந்த கலைச்செல்வியும் அருகே இருந்தவர்களும் விஜய லட்சுமியை கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டனர். கடமை முடிந் தது என்று நினைத்து, விஜய லட்சுமியை அழைத்து வந்த நபர் அமைதியாக சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து விஜய லட்சுமியின் தந்தை சிவக்குமாரிடம் கேட்டபோது, "எனது குழந்தையை பத்திரமாக அழைத்து வந்தவர் ஒரு முஸ்லிம் நண்பர். அவர் மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான் எங்களுக்கு தெரியும். அவரது பெயர் கூட தெரியவில்லை.
அந்த நல்ல மனிதருக்கு நேரில் நன்றி சொல்ல நினைக்கிறேன். குழந்தை காணாமல்போன நேரம் முதல் நானும், எனது மனைவியும் பித்து பிடித்ததுபோல இருந்தோம்" என்றார்.