

தேன்கனிகோட்டை வனப்பகுதியில் கரடிகள் வசிப்பது தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை, நரி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட பலவகை விலங்குகள் வசிக்கின்றன. இவற்றில் யானை, காட்டுப்பன்றிகளைத் தவிர இதர விலங்கினங்கள் அரிதாகத் தான் வனப்பகுதியை விட்டு வெளியேறும். இவற்றின் உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவைகள் நிறைவேறி விடுவதால் இவை அடர்வனப் பகுதியிலேயே பெரும்பாலும் வசிக்கும்.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு தேன்கனிகோட்டை வனப்பகுதியில் கரடிகள் வசித்ததாகவும், தற்போது கரடிகள் இருப்பதை உறுதி செய்ய முடியவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போதைய வறட்சி காரணமாக இங்கு கரடிகள் வசிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வறட்சி தாக்கத்தால் வனத்தில் குடிநீரின்றி தவிக்கும் விலங்கினங்கள் அனைத்தும் அடர் வனத்தை விட்டு வெளிவரத் தொடங்கியுள்ளன. இவை வனத்தை விட்டு முழுமையாக வெளியேறினால் விலங்கினங்களுக்கு மனிதர்கள், வாகனங்கள், நாய் உள்ளிட்ட விலங்கினங்களால் ஆபத்து ஏற்படும். மேலும், இந்த விலங்கினங்களால் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, விலங்கினங்கள் நடமாட்டத்தை வனப்பகுதியிலே இருக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, வாகனங்கள் செல்லும் பகுதி வரை வனத்துறையினர் டேங்கர் மூலம் தண்ணீரை கொண்டு சென்று தொட்டிகளிலும், குட்டைகளிலும் நிரப்பி வருகின்றனர். இதுபோன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வன விலங்குகளின் நடமாட்டத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தேன்கனிகோட்டை வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 20-க்கும் மேற்பட்ட கரடிகள் வனப்பகுதியில் சுற்றித் திரிவது தெரிய வந்துள்ளது. வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வைத்துள்ள தொட்டி பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் இந்த கரடிகள் உலவுவுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திரா வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பர்கூர், வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது. இந்நிலையில் தேன்கனிகோட்டை வனப்பகுதியிலும் கரடிகள் வசிப்பது தற்போதைய வறட்சியால் உறுதி செய்யப்பட்டுள்ளது.