

காவிரி, சிறுவாணி பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் பேரவையில் இருந்து திமுக உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்:
சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சிறுவாணியில் தடுப்பணை கட்டப்பட்டால் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். விவசாயமும் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இப்பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும். அனைத்துக் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் குழுவை அமைத்து பிரதமரை சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
காவிரியில் இருந்து தமிழகத் துக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி விவசாய சங் கங்களின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட் டம் நடைபெறுகிறது. அதிமுக தவிர மற்ற கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, பேரவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும்.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):
சிறுவாணியில் தடுப்பணை கட்டு வதை தடுத்து நிறுத்தவும், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெறவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடம் தரவில்லை. பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லை. எனவேதான், வழக்கமான தேதிகளில் பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
பருவ மழை பெய்து நீர்மட்டம் 90 அடி அளவுக்கு உயர்ந்தால் பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். 1970 முதல் திமுக ஆட்சியில் பல ஆண்டுகள் மேட்டூர் அணை சில மாதங்கள் தாமதமாகவே திறக்கப்பட்டன.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற இடத்தில் அணை கட்ட கேரள அரசு முயற்சித்து வரு கிறது. இதை தடுத்து நிறுத்தக்கோரி மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் தமிழக அரசு பலமுறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், தமிழக அரசின் கருத்துகளை கேட்காமலேயே அணை கட்டு வதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத் துக்கு உரிய தண்ணீரை பெறவும், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், இப்பிரச்சினையை திமுக வேண்டுமென்றே அரசியலாக்கி வருகிறது.
மு.க.ஸ்டாலின்:
சிறுவாணி அணை, காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால், இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்.
(இவ்வாறு ஸ்டாலின் கூறியதும் அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.)
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
காவிரி போன்ற இரு மாநிலங் களுக்கு இடையேயான பிரச்சினை களில் முதலில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடிதம் எழுத வேண்டும். பிறகு மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும். அதன் பிறகும் எதுவும் நடக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். அதன்படி, காவிரி பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. இங்கே பேசிய காங்கிரஸ் தலைவர் ராமசாமி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தவில்லை.
கே.ஆர்.ராமசாமி:
கர்நாடக அரசை வலியுறுத்த தயாராக இருக்கிறோம். ஆனால், இப்பிரச்சினையில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுகதான் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி இருந்தபோதும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் மூலம் போராடி 2013-ல் மத்திய அரசிதழில் வெளியிட வைத்தார்.
இவ்வாறு விவாதம் நடை பெற்றது.
வெளிநடப்பு செய்த திமுக உறுப் பினர்கள் சிறிது நேரத்தில் அவைக்கு திரும்பி ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான் மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங் கேற்றனர்.