

சென்னை தலைமைச் செயலகத் தில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வடமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து வேலை செய்கின்றனர். அவர்களில் வாக்காளர் பட்டியலில் இல்லாத 3 ஆயிரம் பேரிடமிருந்து மனுக்களை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் பெற்றுத் தந்தனர். அவற்றை அந்தந்த தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளோம்.
சாலையோரங்களில் வசிப்பவர்கள்கூட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால், அவர்கள் மனு கொடுத்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக தற்போது நடக்கும் முகாம்களில் மாலை வரை மனுக்களை ஊழியர்கள் பெறவேண்டும்.
கோயில் விழாக்கள்
தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியின் சின்னத்தை மாற்ற பரிசீலனை செய்வதாக வந்த செய்தி ஊகத்தின் அடிப்படையில் வெளியானதாகும். கோயில் திருவிழாக்களில் அரசியல் விளம்பரங்கள் இடம்பெறுவது தவறு. அரசியல்வாதிகள் விழாக்களுக்கு எந்தவிதமான ஸ்பான்ஸரும் செய்யக்கூடாது. போஸ்டர்களில் அரசியல் வாசகங்கள் கூடாது. தேர்தல் புகார் தொடர்பாக இதுவரை எந்தக் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.
தமிழக டிஜிபி மீது திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது. ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள், தேர்தல் பணியில் இருந்து நீக்கப்படுவர். பறக்கும் படையில் இடம்பெற்றிருந்த பெண் அதிகாரி, பணம் வைத்திருந்த ஒருவரை அதிகம் தொல்லை செய்ததால் பணியில் இருந்து அனுப்பப்பட்டார்.
மூன்றாம் பாலினத்தவர்
மூன்றாம் பாலினத்தவர்களில் பலர், தங்களை பெண்கள் என பதிவு செய்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகு தனி முகாம் நடத்தி அதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் 10 வாகனங்கள் செல்லலாம். அதற்குமேல் வாகனங்கள் இருந்தால், அந்த ஊர்வலம் இரண்டு பிரிவாக பிரிந்து செல்ல வேண்டும். பொதுக்கூட்டங்களுக்கு வெளியூரில் இருந்து வாகனங்களில் ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். வேட்புமனு தாக்கல் தொடங்கும்வரை, அதற்கான செலவுகள் அனைத்தும் அந்தந்த அரசியல் கட்சியினரின் கணக்கில் சேர்க்கப்படும்.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.