

கிண்டி திரு.வி.க. தொழிற் பேட்டையில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. சாதாரண பெட்டிக்கடைகளில் ஆரம்பித்து சிறு, குறு மற்றும் பெரு வர்த்தக நிறுவனங்கள் வரை தொழிற்பேட்டையில் உள்ளன. கிண்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து தொழிற்பேட்டைக்கு செல்லும் பலர் ஷேர் ஆட்டோக்கள் ஏற்படுத்தும் நெரிசலால் சாலையில் நடக்க முடியாமல் அவதியுறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிண்டி தொழிற்பேட்டையில் பணியாற்றி வரும் கீதா என்பவர் கூறியதாவது:
நான் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தினசரி போரூரிலிருந்து கிண்டிக்கு பணிக்கு செல்கிறேன். காலை 9 மணிக்கு கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து தொழிற்பேட்டையில் உள்ள எனது பணியிடத்துக்கு பணிக்கு செல்வேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நான் பணி செய்யும் நிறுவனத்துக்கு 200 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
கிண்டி ஆலந்தூர் சாலையிலிருந்து இடதுபுறம் பிரியும் அந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக ஷேர் ஆட்டோக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வருகின்றன. இதனால், சாலை முழுவதும் ஷேர் ஆட்டோக்களால் நிரம்பி விடுகிறது.
மக்கள் அதிகமாக உள்ள இடம் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் ஷேர் ஆட்டோக்கள் சீறிப் பாய்ந்தபடி செல்கின்றன. இதனால், விபத்துக்கள் ஏற்படும் சூழலும் உள்ளது. ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் செல்வதால், பேருந்துகள் அந்தவழியே செல்ல முடிவதில்லை. இதனால், இட நெருக்கடியும் ஏற்படுகிறது. சில நேரங்களில் இடிப்பது போலவே ஷேர் ஆட்டோக்கள் செல்கின்றன. எனவே, போக்குவரத்து காவல்துறை இந்த ஷேர் ஆட்டோக்களின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக கிண்டி பகுதி போக்குவரத்து காவல்துறையினரிடம் கேட்ட போது, ‘‘ஷேர் ஆட்டோக்களை பேருந்து நிறுத்தத்துக்கு வராமல் தடுத்துள்ளோம். ஷேர் ஆட்டோக்கள் நிறுத்த ஆலந்தூர் சாலைக்கு இடது ஓரத்தில் ஒரு இடம் உள்ளது. அங்கும் அதிக நேரம் ஆட்டோக்கள் நிற்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். மீறி யாராவது நிறுத்தினாலும் நடவடிக்கை எடுக்கிறோம். ஷேர் ஆட்டோக்கள் வேகமாக செல்வதை தடுக்கவும், சாலைகளில் நெரிசல் ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுப்போம்’ என்றனர்.