

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், தென் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோட்டை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்துவரும் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் குறைந்த அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, அதிகபட்ச வெப்பநிலையாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கரூர் மற்றும் சேலத்தில் 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.