

அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான தி இந்து மையம் சார்பில் பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்தரங்கு சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. இந்தியாவில் தடையற்ற பொருளாதார வளர்ச்சி இனி இருக்குமா என்ற தலைப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சியை ஒப்படைத்தபோது, நாட்டின் நிதிநிலைமை வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கடந்த 2009-10-ல் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது. அப்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சரிசெய்து 7.18 என்ற சாதனை வளர்ச்சியில் விட்டுச் சென்றோம். அப்போது ஒரு பேரலுக்கு 109.5 ரூபாயாக இருந்த கச்சா எண்ணெய்யும் படிப்படியாக குறைந்து 2015-ல் 40 டாலராக குறைந்திருந்தது. இதன் பலனும் மத்திய அரசுக்கு கிடைத்தது.
எங்கள் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மூன்று பிரச்சினை களைச் சந்தித்தது. சர்வதேச நிதி நெருக்கடி உள்ளிட்ட இரண்டு வெளிநாட்டு காரணிகள் அதற்கு காரணமாக அமைந்தன.
மூன்றாவதாக உள்நாட்டு காரணிகளான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அமைந்தன. நீதிமன்றத்துக்கு செல் லாமல் உரிமங்களை ரத்து செய் திருந்தால், இவை பொருளா தாரத்தைப் பாதித்திருக்காது.
மத்திய அரசின் ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறுகளாக இருந்தன. பசு வதை தடுப்பு போன்ற பிரச்சாரங்கள், ரோஹித் வெமுலா தற்கொலை போன்றவை மத்திய அரசின் தவறான அரசியல் அணுகுமுறைக்கு உதாரணங்கள். இவை பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி திட்டத்தை தவிர வேறு எதுவும் உருப்படியாக இல்லை. அதை எப்படி அமல்படுத்துகிறார் கள் என்பதைப் பொறுத்துதான் அதன் வெற்றி அமையும். பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் ஒரு பகுதி ஊழல் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 19.3 சதவீத சிறுபான்மை மக்கள் உள்ள னர். அங்கு போட்டியிட்ட 403 இடங் களில் தேசிய கட்சி சார்பில் ஓர் இடத்தில் கூட சிறுபான்மை வேட்பாளர் போட்டியிடவில்லை. ஒரு தேசிய கட்சி பெண்களுக்கு இடமளிக்கவில்லை. சிறுபான்மை யினர், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரைப் புறக் கணித்துவிட்டு நாட்டின் வளர்ச்சியை எட்ட முடியுமா? இதன்மூலம் என்ன செய்தி சொல்லப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் தடையின்றி வளர வாய்ப் பிருக்கிறது. ஆனால், தடையின்றி வளருமா என்றால் அதை முழுமை யாக சொல்ல முடியாது. கடந்த 25 ஆண்டுகளைப் பற்றி இளைஞர்கள் கவலைப்பட வேண்டாம். அடுத்த 25 ஆண்டுகளை எண்ணி நம்பிக்கையுடன் இருப்போம்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
அடுத்து நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில், ஊழல் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, ‘ஊழலால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கிறது. வருமானச் சான்று, பட்டா, கட்டிட திட்ட அனுமதி உள்ளிட்ட விஷயங்களில் பெறப்படும் லஞ்சம் ஏழை, எளிய மக்களைச் சுரண்டுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு பெறப்படும் நன்கொடை ஒருவகை லஞ்சம் தான். இதன்மூலம் தகுதியுள்ளவர்களின் வாய்ப்பு பறிபோகிறது. நிர்வாக ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, ‘ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 46 சதவீத கழிவறைகளில் தண்ணீர் வசதி இல்லை. திட்டங்கள் இருந்தாலும் அதைக் கொண்டு சேர்ப்பதில் தவறு நடக்கிறது. செயல்படாத ஐஏஎஸ் அதிகாரிகளை 40 வயதில் ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.
திறமையானவர்களை 40 வயதில் ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்க வழிமுறை வகுக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகள் நினைத்தால் எந்த அரசியல் நெருக்கடிக்கும் பணியாமல் நேர்மையாக பணியாற்ற முடியும்’ என்றார். முன்னதாக என்.ரவி அறிமுக உரையாற்றினார். என்.ராம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். என்.முரளி மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் எம்.கே.நாராயணன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.