Published : 05 Jun 2017 08:43 AM
Last Updated : 05 Jun 2017 08:43 AM

அதிமுக, திமுக கட்சிகளுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை: ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மற்ற யாரையும்விட நான் தெளிவாக இருக்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவரும், எனது நண் பருமான கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை நுழைவு வைர விழாவையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையை எனது முகநூல் பக்கத்திலும் (பேஸ்புக்) பதிவிட்டிருந்தேன்.

எனது முகநூல் பக்கத்தில் இதுதொடர்பாக பின்னூட்டம் இட்டிருந்தவர்களில் பலர், அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து கருணாநிதிக்கு வாழ்த்து கூறியதற்காக நன்றி தெரிவித்திருந்தனர். இன்னும் பலர், ‘கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அக்கட்சியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி அமைத்துக் கொள்ளக் கூடாது’ என்று அன்பாக எச்சரிக்கை விட்டிருந்தனர். அந்த இளைஞர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காகத்தான் இந்த முகநூல் பதிவு.

திமுகவுடனும், அதிமுகவு டனும் கூட்டணி இல்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித் திருக்கிறேன். கட்சி என்பது வேறு, நட்பு என்பது வேறு. அதிமுகவுடனும், திமுகவுடனும் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என்பதுதான் பாமகவின் முடிவு. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும்கூட இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற எங்களின் முடிவில் உறுதியாக இருக்கிறோம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

கொள்கையில் நாம் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் அரசியல் நாகரிகம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை நேரிலும், அறிக்கை வாயிலாகவும் தெரிவிக்கி றோம். இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு இல்லை. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மற்ற யாரையும்விட நான் தெளிவாக இருக்கிறேன். அதிமுக, திமுக அல்லாத அரசை தமிழகத்தில் அமைத்தே தீருவது என்பதில் பாமக உறுதியாக உள்ளது.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x