

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் இருந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உட்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து 2 வாரத்தில் பதிலளிக்க எதிர்தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன். இவரை, கடந்த 2002 ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவா ளால் வெட்டியது. இதில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயஸ்ரீ, வேலைக்காரர் கிருஷ்ணன் ஆகியோர் படுகாய மடைந்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் ஜெயேந்திரர் மீது குற்றம்சாட்டி, அரசு அதிகாரிகள் பலருக்கு மொட்டை கடிதங்கள் சென்றதாகவும், இந்தக் கடிதங்களை ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தான் அனுப்புவதாக நினைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி யார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் கதிரவன், ரவி சுப்பிரமணியம், சுந்தரேசஅய்யர், ரகு, அப்பு, மீனாட்சி சுந்தரம், ஆனந்த குமார், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், சின்ன குமார்ஆகிய 12 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ரவிசுப்பிர மணியம் அப்ரூவராக மாறினார். வழக்கு விசாரணையின் போது கதிரவன் கொலை செய்யப்பட்டார். அப்பு இறந்து விட்டார்.
இதையடுத்து மற்ற 9 பேர் மீதான வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரையும் விடுதலை செய்து கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உத்தரவிட்டது.
தமிழக அரசு மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் 77 நாட்கள் கழித்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவில், ‘இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ரவிசுப்பிரமணியம் உள்ளிட்ட 81 பேர் சாட்சியம் அளித்தனர். மொத்தம் 220 சாட்சி ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 106 குற்ற ஆவணங்களில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இவை எதையுமே கீழ்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட 9 பேரையும் விடுதலை செய் துள்ளது. ஆகவே, அவர்களை விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது
இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சண்முகவேலாயுதம் ஆஜராகி மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதிக்க கோரினார். அதையடுத்து, மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து 2 வாரத்துக்குள் பதிலளிக்க எதிர்மனுதாரர்கள் 9 பேருக்கும் நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதி உத்தர விட்டார்.
வழக்கறிஞர் கருத்து
தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, ‘‘நோட்டீஸ் வந்தால் 9 பேரின் சார்பிலும் தனித்தனியாக வழக்கறிஞர்கள் ஆஜராவர். அதன்பிறகே இந்த வழக்கு குறித்து எங்களின் கருத்தை தெரிவிக்க முடியும்’’ என்றனர்.