

தாம்பரம் விமானப்படை தளத்தில் உள்ள மெக்கானிக்கல் பயிற்சி மையத்துக்கு குடியரசுத் தலைவரின் கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 3-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த அங்கீகாரத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.
இதுகுறித்து தாம்பரம் விமானப் படை மையத்தின் தலைமை பயிற்சி அதிகாரி ஏர் மார்ஷல் எஸ்ஆர்கே.நாயர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் 6 பயிற்சிப் பிரிவுகள் உள்ளன. இதில் வெளிநாட்டு வீரர்கள் 20 பேர் உட்பட 3,500 பேர் பயிற்சி பெறுகின்றனர். இப்பயிற்சி மையத்தில் உள்ள மெக்கானிக் பயிற்சிப் பிரிவு, பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ஹெலிகாப்டர் படைப் பிரிவு ஆகியவை சிறப்பாக செயல்பட்டதால் குடியரசுத் தலைவரின் கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொடி வழங்கும் நிகழ்ச்சி வரும் 3-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். அவரிடம் இருந்து இந்தக் கொடியை மெக்கானிக்கல் பயிற்சி மைய கமாண்டிங் அதிகாரி ஏ.அருணாசலேஸ்வரன், ஹெலிகாப்டர் படைப் பிரிவின் கமாண்டிங் அதிகாரி வி.டி.பதோனி ஆகிய இருவரும் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
தஞ்சாவூரில் விமானப்படை தளம் அமைக்கும் பணி 2 அல்லது 3 ஆண்டுகளில் நிறைவடையும். ஏஎன்-32 ரக விமானம் விபத் துக்குள்ளானதற்கு மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இலங்கை படை வீரர்கள் யாருக்கும் தாம்பரம் மையத்தில் பயிற்சி அளிக்கப்படவில்லை.
இவ்வாறு எஸ்ஆர்கே.நாயர் கூறினார்.