

அதிமுகவை உடைக்க நினைத்த திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் துணை போனார் என திருப்பரங் குன்றத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார்.
மதுரை புறநகர் அதிமுக ஆலோசனைக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்றது. புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல் லப்பா எம்எல்ஏ தலைமை வகித்தார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏக்கள் பெரிய புள்ளான், நீதிபதி, ஏ.கே.போஸ், வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது: ஜெய லலிதாவின் பிறந்த நாளை கொண்டாடவிடாமல் தடுக்க எதிர்க்கட்சியினர் சதி செய்கின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு, ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடவுள்ளோம்.
தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்தில் இல்லாத அளவுக்கு மதுரையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கிளைகள் உள்ளன. இதில் கிளைச் செயலாளர்கள், 13 ஒன்றிய பேரூர் செயலாளர்கள், மற்ற அணி செயலாளர்கள் யாரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் செல்லவில்லை. எம்ஜிஆர் காலத்திலிருந்து தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது. சாதாரண தொண்டர்கூட இங்கு அமைச்சராகலாம். எம்ஜிஆருடன் ஓ.பன்னீர் செல்வம் தன்னை ஒப்பிடுகிறார். ஸ்டாலின் அதிமுகவை உடைக்க நினைத்தார்.
அவருக்கு ஓ.பன்னீர் செல்வம் துணைபோனார். தற்போது ஸ்டாலினும், பன்னீர் செல்வமும் அரசியலில் அடையாளமில்லாமல் உள்ளனர். பொதுமக்கள் போர்வை யில் எம்எல்ஏ-க்களுக்கு, கடந்த 2 வாரமாக எதிர்க் கட்சியினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் களும் தொந்தரவு கொடுத்தனர். தற்போது மக்கள் அதை புரிந்து கொண்டு அதிமுக பக்கம் உள்ளனர். திமுக அரசியல் காழ்ப்புணர்வில் தொடர்ந்த வழக்கில் அதிமுகவை தற்காலிகமாக பழிவாங்கி உள்ளனர். திமுகவினர் சர்க் காரியா கமிஷன் தொடங்கி 2ஜி வரை பல்வேறு ஊழல்கள் செய்துள்னனர். இவர்கள் ஊழலை பற்றி பேசுகின்றனர்.
நாங்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி, ஸ்டார் ஹோட்டல் இல்லை. அங்கு எந்த சொகுசு வசதியும் இல்லை. எங்கள் இயக்கத்தை காப்பாற்ற நாங்கள் அங்கு சாதாரண வாழ்க்கையைதான் சிறிது காலம் வாழ்ந்தோம். அரசியலில் செல்வாக்கு இல்லாத மதுசூதனன், பொன் னையன் போன்றவர்கள்தான் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றுள்ளனர். அவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண் டியதில்லை. நம்முடைய முதல் எதிரி திமுகதான். அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்து வளர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்டாலினுக்கு அரசியல் அனுபவம் போதாது
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “அதிமுகவை 1,000 ஆண்டுகளானாலும் யாராலும் அசைக்க முடியாது. தன்னை மூன்று முறை முதல்வராக்கிய அதிமுகவுக்கு பன்னீர்செல்வம் துரோகம் செய்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட லேசான சலசலப்பை பயன்படுத்தி ஆட்சியை அகற்றவிடலாம் என ஸ்டாலின் நினைத்தார். அவருக்கு இன்னும் அரசியல் அனுபவம் போதாது. ஸ்டாலின் பேசுவது எல்லாம் பொய். அவர் நடவடிக்கைகள் எல்லாம் நாடகம்” என்றார்.