Published : 19 Nov 2014 10:41 AM
Last Updated : 19 Nov 2014 10:41 AM

தருமபுரியை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆறு நாளில் எட்டு குழந்தைகள் பலி

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் ஐந்து குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பிரிவில் கடந்த ஆறு நாட்களில் எட்டு குழந்தைகள் உயிர் இழந்த சோகம் நடந்துள்ளது.

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் ஐந்து குழந்தைகளும், நான்கு நாட்களில் மட்டும் 12 குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையைத் தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் பச்சிளங்குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து உயிர் இழந்து வரும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12-ம் தேதி முதல் நேற்று வரை 8 பச்சிளங்குழந்தைகள் முறையான சிகிச்சை இன்றி உயிர் இழந்த சம்பவம், பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12-ம் தேதி விழுப்புரம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி- அலமேலு தம்பதியரின் ஆண் சிசுவும், கடந்த 13-ம் தேதி சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சவரியூர் பகுதியைச் சேர்ந்த பழனி- பாப்பா தம்பதியரின் பெண் குழந்தை, அதே நாளில் சேலம் மாவட்டம் அனுப்பூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன்- கலா தம்பதியரின் ஆண் குழந்தையும் உயிர் இழந்துள்ளது.

கடந்த 14-ம் தேதி நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் - சரோஜா தம்பதியரின் பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. 15-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த குமார்- செல்வி தம்பதியரின் ஆண் குழந்தை, 16-ம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்- ராதா தம்பதியரின் ஒரு வார ஆண் குழந்தை, அதே நாளில் நாமக்கல் மாவட்டம் நீர்முள்ளிகுட்டைப் பகுதியைச் சேர்ந்த பொன்மலை- மஞ்சு தம்பதியரின் பெண் குழந்தை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தன. சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார்- தங்கமணி தம்பதியரின் பெண் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அந்த இழந்த சிகிச்சை பலனின்றி இறந்தது. கடந்த ஆறு நாட்களில் 8 பச்சிளங்குழந்தைகள் முறையான சிகிச்சை இன்றி உயிர் இழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பச்சிளங்குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகளை வைக்கும் இன்குபேட்டர் கருவியில் மூன்று முதல் நான்கு குழந்தைகள் வைக்கப்படுவதாகவும், இதனால் ஒரு குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நோய் மற்ற குழந்தைக்கும் தொற்றி குழந்தை இறப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தர்மபுரியைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து குழந்தைகள் இறப்பு சம்பவத்தால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x