

வேளச்சேரி, துரைப்பாக்கம், மதுரவாயல், மாதவரம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் புதிதாக இணைக்கப்பட்ட இடங்களில் 5 தீயணைப்பு
நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகர விரிவாக்கத்தால் மக்கள் நெருக்கம் மிகுந்த பல பகுதிகள் மாநகராட்சி எல்லைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனடியாக தீத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி
வேளச்சேரி, விருகம்பாக்கம், துரைப்பாக்கம், மதுரவாயல், மாதவரம் ஆகிய 5 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.3.70 கோடி செலவில் இந்தத் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு நிலையத்திலும் நிலைய அலுவலர், முதல் நிலை தீயணைப்பாளர், ஓட்டுநர் மற்றும் மெக்கானிக், தீயணைப்பாளர் ஆகியோரும் உடனடியாக நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.