

தமிழகத்தில் 100 'அம்மா மருந்தகங்கள்' புதியதாகத் தொடங்கப்படும் என்று மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2014-15 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு:
'மாநிலத்தில் உள்ள ஒரு கோடியே 84 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 2013-2014 ஆண்டிற்கு உணவு மானியமாக 4,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது திருத்திய மதிப்பீட்டில் 5,000 கோடி ரூபாயாக உயந்த்தப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டிற்கு இந்த ஒதுக்கீடு 5,300 கோடி ரூபாயாக மேலும் உயர்த்தப்படும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த 297 அம்மா உணவகங்களைத் தொடங்கி நடத்துவதுடன் அம்மா குடிநீர்த் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
இது தவிர, மேலும் ஒரு முன்முயற்சியாக ஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 'அம்மா மருந்தகங்கள்' புதியதாகத் தொடங்கப்படும். இதற்கென 20 கோடி ரூபாய் மாநில விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து பயன்படுத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.