

நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல அரசு கட்டிட ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் நேற்று அவரது விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்ரமணியம்(58). அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான இவர் அரசு கட்டிட ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர் உள்ளிட்டோருக்கு சொந்தமான குவாரி உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு சில ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.
சோதனை நடைபெற்றபோது, சுப்ரமணியம், சுவிட்சர்லாந்து சென்றிருந்தார். இதன் காரணமாக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருவதற்கான உத்தரவு (சம்மனை) அவரது மகன் சபரியிடம் வழங்கப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து சுப்ரமணியம் திரும்பியதைத் தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை நாமக்கல் அருகே மோகனூர் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது விவசாய தோட்டத்துக்கு சுப்ரமணியம் சென்றுள்ளார். அங்கு அவர் மயக்கமடைந்து விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கும், போலீஸுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மோகனூர் போலீஸார் அவரது உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து சுப்ரமணியத்தின் அண்ணன் காளியண்ணன் கூறியதாவது: சுப்ரமணியத்துக்கு, மனைவி சாந்தி(52), மகள் அபி(30), மகன் சபரி(24) ஆகியோர் உள்ளனர். அபிக்கு திருமணமாகி சேலம் வலசையூரில் வசித்து வருகிறார். மகன் சபரி, மருமகன் அரவிந்த் ஆகியோர் ஒப்பந்தப் பணிகளை கவனித்து வருகின்றனர். நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற சுப்ரமணியத்துக்கு மயக்கம் ஏற்பட்டு இறந்ததாகக் கூறுகின்றனர் என்றார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே இறப்புக்கான முழு காரணமும் தெரியும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
தொடரும் மர்மம்
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரான சேலம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதேதினம் கேரள மாநிலத்தில் கனகராஜின் நண்பர் குடும்பத்தினருடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில், கனகராஜின் நண்பர் மட்டும் உயிர் பிழைத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ்-க்கும் நெருக்கம்
சுப்ரமணியத்தின் நண்பர்கள் கூறும்போது, ‘சுப்ரமணியம் பொறுமையானவர். அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என்பதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட ஒப்பந்தப் பணியை எடுத்து மேற்கொண்டு வந்தார்.
வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து அவரது அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு சீல் வைக்கப்பட்டன. வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இதனால் மன உளைச்சலில் இருந்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கரைக் காட்டிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு நெருக்கமானவர். நாமக்கல்லைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பிஎஸ்கே பெரியசாமி, சுப்ரமணியின் சகோதரர் என்றனர்.
வயிற்றில் விஷம் இருந்ததா?
இந்நிலையில், சுப்ரமணியத்தின் உடல் நேற்று மாலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் விஷம் இருந்ததாகவும், இதனால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் குளிர்பான பாட்டில் கிடந்ததாகவும், அதில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மோகனூர் போலீஸார் தற்கொலை வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங் களில் விசாரணை நடத்தி வருகின் றனர். முன்னதாக சுப்ரமணியம் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, நாமக்கல் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.