

சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, காங்கிரஸ் தேசியச் செயலாளர் சு.திருநாவுக்கரசர், பாஜக விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் வி.அஜய் பிரபாகர் மூப்பனார், தமாகா மாநில துணைத் தலைவர் இ.எஸ்.எஸ்.ராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பசுமைவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கே.எம்.நிஜாமுதீன், மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் எம்.ஜெயினுலாபிதீன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து, சென்னைவாழ் காவிரி மைந்தர்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சிவராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிருபர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ள போதிலும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறந்துவிட அந்த மாநில அரசு மறுக்கிறது. இதனால், இந்த ஆண்டு ஒருபோக சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்படும் அபாயமும் உள்ளது.
காவிரியில் நீர் திறந்து விடப் படாததால் சென்னை உட்பட 7 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 25 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பா சாகுபடிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இதை வலியுறுத்த வேண்டும்.
இதில் தாமதம் ஏற்பட்டால் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்களின் தலைவர்கள் பிரதமரை சந்திக்க முடிவு செய்துள் ளோம்.
சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த முழு அடைப்புப் போராட் டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெறும்.
போராட்டத்துக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், வணிகர் சங்கங்கள் முழு ஆதரவு தர வேண்டும். தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடை பெற இருப்பதால் டெல்டா மாவட் டங்களில் வரும் 19-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை இடதுசாரி கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.