Last Updated : 05 Aug, 2016 04:14 PM

 

Published : 05 Aug 2016 04:14 PM
Last Updated : 05 Aug 2016 04:14 PM

ஆளுநர்களின் அதிகாரங்களை வரைமுறை செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

ஆளுநர்களின் அதிகாரங்களை வரைமுறை செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி நேற்று வலியுறுத்தினார். இந்திய அரசியல் அமைப்பின் 356 ஆவது சட்டப்பிரிவு எதிர்கட்சிகளை பழி வாங்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இது குறித்து தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி பேசியதாவது: அருணாசலப் பிரதேசத்திலும், உத்தரகண்ட் மாநிலத்திலும் நடக்கும் சம்பவங்கள் ஜனநாயகத்தை வெட்கப் பட வைக்கும் அளவுக்குப் போயுள்ளன. நமதுபிரதமர் பல வெளிநாடுகளுக்குப் போகிறார், அங்கே பல நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார், பல நாட்டு மக்களிடையேயும் பேசுகிறார். ஆனால்நமது நாட்டிலேயே இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பது ஜனநாயகத்தை மட்டுமல்ல. அரசுகளை வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது.

356 வது பிரிவு என்பது ஆட்சியில் இருக்கும் கட்சிகள் தங்களதுஎதிர்க்கட்சிகளை பழிவாங்க ஓர் ஆயுதமாகவே பயன்பட்டு வருகிறது.

எங்கள் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும், எங்கள் தலைவர் கலைஞரும், எங்கள் கட்சியின் தலைவர்களும் 356 வது சட்டப்பிரிவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறோம். அரசமைப்பு சட்டத்தில் இருந்து 356 வது சட்டப்பிரிவை நீக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் இந்த சட்டப்பிரிவை, இந்த அளவுக்கு மோசமாக தவறாக பயன்படுத்தப்படும் என்று கருதியிருக்கமாட்டார்கள். அம்பேத்கர் அவர்கள் கூட இந்த சட்டப்பிரிவு அரசமைப்புச் சட்டத்திலிருந்து வெளியே வைக்கப்படவேண்டும் என்று கருதினார். 356 சட்டப்பிரிவு ஓர் இறந்த சட்டமாகவே கருதப்படவேண்டும் என்றார் அவர்.

இதுவரை 356 வது சட்டப்பிரிவு 115 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் 107 முறை மத்திய ஆளுங்கட்சியின் எதிர்க்கட்சிகள் மீதே இப்பிரிவுபாய்ந்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் திமுக அரசு இருமுறை கலைக்கப்பட்டிருக்கிறது. (அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்கள் அரசு ஒருமுறை கலைக்கப்பட்டிருப்பதாகக் குரல் கொடுத்தனர்) தமிழ்நாடு அரசு மூன்று முறை கலைக்கப்பட்டிருக்கிறது. 356 சட்டப்பிரிவே ஜனநாயகத்துக்கு எதிரானது. ஒரு மாநில மக்கள் தங்கள்விருப்பத்துக்கேற்ப தேர்தல் மூலம் ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கின்றனர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க மத்திய அரசுக்கும், ஆளுநர்களுக்கும் என்ன உரிமை இருக்கிறது?

இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆளுநர் என்ற பதவி மாநிலங்களுக்கு தேவையா? என்ற கேள்விக்கு நாம்பதில் தேட வேண்டும். அந்த அளவுக்குப் போகவில்லை என்றால் கூட, மாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் என்னென்ன என்பதை வரைமுறைப்படுத்த வேண்டிய நேரத்தில் நாம் இருக்கிறோம். மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான 356வது சட்டப்பிரிவை அரசியல் அமைப்பில் இருந்து நீக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x