

மத்திய திட்டக் கமிஷனுக்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் 3-ம் ஆளுமைக் குழுக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
கடந்த 2012-ல் ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ திட்ட அறிக்கையை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளி யிட்டார். தமிழக மக்களுக்கு உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு வகை செய்வதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்திய தொலைநோக்குத் திட்டம் 2030-க் கான ஆவணம் தயாரிக்கும்போது, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டத்தின் பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசின் தொலைநோக்குத் திட்ட இலக்குகளை அடைய நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வரலாறு காணாத வறட்சி
கடந்த ஆண்டு பருவ மழை 62 சதவீதம் குறைந்ததால் தமிழகம் கடும் வறட்சியை எதிர்கொண் டுள்ளது. டெல்லியில் விவசாயி களுக்காக குரல் கொடுத்து வரும் அவர்களது பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீரை முறைப் படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். மாநிலங் களுக்கு இடையே ஓடும் அனைத்து ஆறுகளையும் தேசிய மயமாக்க வேண்டும்.
ஏப்ரல் மாதத்துக்குள் தமிழக விவசாயிகளுக்கு காப்பீடு இழப் பீட்டுத் தொகையை வழங்க காப் பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இலங்கை அரசால் பிடித்து வைக் கப்பட்டுள்ள 133 படகுகளை சீரமைக் கப்பட்ட நிலையில் உடனடியாக விடுவிக்க வேண்டும். மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்க வேண்டும்.
பொது நுழைவுத்தேர்வு
‘நீட்’ தேர்வு மாநிலத்தின் உரிமை களுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. இந்தத் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறை வேற்றி அனுப்பிவைக்கப்பட்ட இரு சட்ட முன்வடிவுகளுக்கும் உடனடி யாக குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தில் நிலவும் சூழலை கருத்தில்கொள்ளாமல், பொறி யியல் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கக் கூடாது.
அனைவருக்கும் கல்வி, இடை நிலை கல்வித் திட்டங்களின்கீழ், ரூ.1,862 கோடியே 34 லட்சம் தமிழகத்துக்கு நிலுவை உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும்போது, மத்திய அரசின் இதர நிதி பரிமாற்றங்கள் பாதிக் கப்படக் கூடாது. உணவு, உரம் மற்றும் எரிபொருள் ஆகியவற் றுக்கான மானியத்தை ரொக்கமாக வழங்குவதை நாங்கள் விரும்ப வில்லை.
மத்திய அமைச்சகங்கள் உரு வாக்கும் திட்டம், கொள்கைகளில் மாநில அரசுகளின் கருத்துகளை பிரதிபலிக்கும் அளவுக்கு நிதி ஆயோக் அமைப்புக்கு போதுமான அதிகாரம் வழங்க வேண்டும். மாநில முதல்வர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.