Published : 05 Nov 2014 08:12 AM
Last Updated : 05 Nov 2014 08:12 AM

தமிழகத்தை மதிக்காத தேசியத் தலைவர்களால் காங்கிரஸுக்கு வீழ்ச்சி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன் கருத்து

முன்னாள் பிரதமர்கள் ஜவஹர் லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திராகாந்தி ஆகியோர் காலங்களில் மத்திய அரசின் உள்விவகார அமைச்சக அரசியல் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநராக பதவி வகித்தவர் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன்.

தேசிய ஒருமைப்பாட்டு குழுவை நேரு ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்திரா காந்தி பிரதமராக இருந்த வரை அதன் செயலராக பதவி வகித்தவர். தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் களுக்கும் அரசியல் மற்றும் அரசு ரீதியாக ஆலோசனைகளை வழங்கிய அனுபவம் உள்ளவர்.

தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கிய ஜி.கருப்பையா மூப்பனாரின் பெரும் மதிப்பைப் பெற்றவரும் ‘பாரத ரத்னா’ சி.சுப்ரமணியத்துடனும் நெருங்கிப் பழகியவருமான பி.எஸ்.ராகவன், தற்போது காங்கிரஸின் உட்கட்சிப் பூசல் குறித்தும் காங்கிரஸின் வளர்ச்சிக்கு அடுத்த கட்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் தனது கருத்துகளை தெரி வித்துள்ளார். அவர் கூறியதாவது:

தேசியக் கட்சிகளில் காங்கிரஸ் ஆனாலும், பாஜக ஆனாலும்.. வட இந்தியத் தலைவர்களால் மட்டுமே டெல்லியில் இருந்து இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, வழிமுறைகள், உணவு முறை போன்ற எதையுமே டெல்லித் தலைவர்கள் தெரிந்து கொள்ளக்கூட முயற்சிப்பதில்லை. தமிழ்நாடு என்றால் இட்லி, தோசை, ரசம், சாம்பார் மாநிலம் என்று நினைக்கின்றனர்.

பாரதி, திருவள்ளுவர் இருந்தது கூட 1970-ல்தான் இந்த வட இந்தியத் தலைவர்களுக்கு தெரியவந்தது. காமராஜர் ஒருவர் மட்டுமே விதிவிலக்காக தென்மாநிலத்தில் இருந்து சென்று தேசியக் கட்சியின் மேலிடத் தலைவராக தன் முத்திரையைப் பதித்தார். மற்றபடி, தென் மாநிலத் தலைவர்கள் அங்கு சென்றால், ‘எப்போதும் கைகட்டுவார் - இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்’ என்ற பாரதியின் வரிகளைப்போல், கையை கட்டிக் கொண்டு, சுதந்திரமே இல்லாமல் பேசுவதற்குக்கூட தயங்குகின்றனர்.

ஆனால், தேசியக் கட்சிகளின் வட மாநிலத் தலைவர்களோ டெல்லிக்குச் சென்று நெஞ்சை நிமிர்த்திப் பேசி, தங்கள் மாநிலத் துக்கான காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். அவர்களைப் போல் தமிழகத் தலைவர்கள் நெஞ்சு நிமிர்த்தி பேசுவதில்லை என்பதற்கு மொழிப் பிரச்சினையும் ஒரு முக்கியக் காரணம்.

இந்தியா 28 வகையான கலாச் சாரங்களைக் கொண்டது. மகாராஷ் டிரத்துக்கு உகந்த கொள்கை, மேற்கு வங்கத்துக்கு உதவாது; மேற்கு வங்கக் கொள்கை அஸ்ஸா முக்கு பொருந்தாது. வட இந்தியப் பாரம்பரியங்களுக்கு சரிப்பட்ட கொள்கைகள், தமிழகத்துக்கு உதவாது. எனவே, கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளாத அரசியல் வெற்றி பெற முடியாது.

தமிழகத்துக்குள் இந்தி கொண்டு வரப்பட்டு, அதனால் எத்தனையோ பஸ்கள், ரயில்கள் எரிக்கப் பட்டு, பல உயிர்கள் இழக்கப்பட் டன. அதன்விளைவு, 1967-ல் இருந்து காங்கிரஸ் கட்சி புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகிலேயே வரமுடியாமல் போய்விட்டது. தமிழகம் எப்படி, தமிழக மக்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ளாதவர் கள் இழைக்கும் கோளாறுகளுக்கு இந்த இந்தி மொழி விவகாரமே பெரிய உதாரணம். இதை வட இந்தியத் தலைவர்கள் இன்றும் புரிந்து கொள்ளவில்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் வளரவில்லை என்றால் அதற்கு வாசன், சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள்தான் காரணம் என்று பழி போடுவது முட்டாள்தனம். கட்சி மேலிடத்தின் மெத்தனமும் அலட்சியப் போக்கும்தான் மூல காரணம். தமிழகக் கலாச்சாரத்தை அறிந்தவர்களை மட்டுமே மேலிடத்து பொறுப்பாளராக போட வேண்டும். காமராஜர், மூப்பனார் எல்லாம் தமிழத்தில் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள். அவர்களை மூடி மறைத்து வைத்து இங்கே கட்சி வளர்க்க முடியாது.

மாநிலத்தில் கட்சி உடைகிறது என்றால் ராகுலும், மற்ற வட இந்தியத் தலைவர்களும் ஓடோடி வந்து பேச வேண்டாமா? சமாதானம் பேசி சேர்த்துவைக்க முயற்சியாவது செய்ய வேண்டாமா? அதுதானே தலைமைக்கான தத்துவமாக இருக்கும். அதை விடுத்து, வாசனை வெளியேற்றுவது போன்ற வாழையடி வாழையான நடவடிக் கைகள் மேலிடத்தின் அறியாமைக் கும் கையாலாகாத தன்மைக்குமே சான்றாகும்.

மேலிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று மாநிலத் தலைவர்கள் எதிர்பார்க்கி றார்களோ, அதேபோல் மாநிலத் தலைமையும் தங்களுக்கு கீழுள்ள தொண்டர்களிடம் நடந்துகொள்ள வேண்டும். செயற்குழுவை அடிக்கடி கூட்ட வேண்டும். அனு சரணையோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த சீர்திருத்தப் பண்புகள் இல்லையென்றால் எத்தனை பதவி மாற்றங்கள் வந்தா லும், வளர்ச்சி இருக்காது, வீழ்ச்சி தான் ஏற்படும்.

இப்பொழுதும் குடிமுழுகிப் போகவில்லை. சோனியா காந்தியே சென்னைக்கு பறந்து வந்து விட்டுத்தரும் பரந்த மனப்பக்குவத் துடன் வாசனுக்கும் அழைப்பு விடுத்து பேசிப் பார்ப்பதற்கான நேரம் கடந்து விடவில்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து.

இவ்வாறு பி.எஸ்.ராகவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x