

தமிழக காவல் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன் என்று டிஜிபி கே.ராமானுஜம் கூறினார்.
தமிழக டிஜிபி ராமானுஜத்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடி வடைந்தது. இதற்கான பிரிவு உபசார விழா பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ராமானுஜம் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் பேசும்போது, "நான் போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன். 1946-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி சென்னை போலீஸில் உதவி ஆய்வாளராக எனது தந்தை சேர்ந்தார். 68 ஆண்டுகளுக்கு பிறகு அதே நாளில் நான் இன்று ஓய்வு பெறுகிறேன். தமிழக காவல் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன். காவல் துறையை நவீனமயமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயன்று வருகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 514 திட்டங்களையும், 20,500 உட் கட்டமைப்பு வசதிகளையும் போலீஸ் துறைக்கு தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் நடவடிக்கையால் தமிழக போலீஸார் பிற மாநில போலீஸாருக்கு முன்னுதாரணமாக உள்ளனர்.
அரசு நமக்கு கொடுக்கும் சலுகைகளைப் பார்த்து மற்ற மாநில போலீஸார் பொறாமைப்படுகின்றனர். ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையாக தமிழக போலீஸாரின் புலனாய்வுப் பணிகள் உள்ளன. இதேபோல நமது பணிகள் தொடர்ந்தால் விரைவில் நாம் ஸ்காட்லாந்து போலீஸாருக்கே பாடம் சொல்லிக் கொடுக்கலாம்" என்று கூறினார்.
தமிழக போலீஸ் உயரதிகாரிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.