

காவிரி நதிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாமல் போனதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும்தான் காரணம் என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் செல்லக்குமாரை ஆதரித்து சித்தராமய்யா பிரச்சாரம் செய்ய சனிக்கிழமை ஒசூர் வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
காவிரி நதிநீர் பிரச்சினையில் இதுவரை தீர்வு காணாமல் போனதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும்தான் காரணம். இவர்கள் இருவரும் பிரச்சினையை சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டிய காலத்தை தவறவிட்டுவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசு திறந்து வருகிறது. தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை.
கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் தேன்கனிக்கோட்டை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். இரு மொழி பேசும் மக்களும் நல்லுறவுடன் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டால், கர்நாடக அரசு சார்பில் செய்து கொடுக்க தயாராக உள்ளோம். இந்த தொகுதி காங்கிரஸ் கோட்டையாகும். எனவே இங்கு காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.