Published : 07 May 2017 07:41 PM
Last Updated : 07 May 2017 07:41 PM

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை தொடங்குகிறது

மருத்துவப் பட்ட மேற்படிப்பு களுக்கான கலந்தாய்வு சென்னை யில் இன்று தொடங்குகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 80 சதவீத இடங்கள் தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்ற பணியில் உள்ள அரசு டாக்டர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் டாக்டர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 6 ஆயிரம் டாக்டர்கள் உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். கடந்த ஜனவரி மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளை காரணம் காட்டி அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று கடந்த 17-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில் மூன்றாவது நீதிபதி, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளை பின்பற்ற வேண்டும். அரசுப் பணியில் உள்ள டாக்டர்களுக்கு சலுகை வழங்க ஏதுவாக மலைப்பகுதி, கடினமான மற்றும் தொலைதூர மற்றும் குக்கிராமங்களை தமிழக அரசே வரையறை செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார்.

தரவரிசை பட்டியல்

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுப்படி வரையறை செய்து மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) www.tnhealth.org என்ற இணையதளத்தில் நேற்று பகல் 12.30 மணி அளவில் வெளியிட்டது. மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் மருத்துவ பட்டய மேற்படிப்பு தரவரிசைப் பட்டியலில் 4,294 பேர் இடம்பெற்றுள்ளனர். பல் மருத் துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் தரவரிசைப் பட்டியலில் 627 பேர் இடம் பெற்றுள்ளனர். மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 252 பேரும், பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 23 பேர் தகுதி பெறவில்லை.

இன்று கலந்தாய்வு

இந்நிலையில், மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை 12 மணிக்கு தொடங்குகிறது. இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்குமாறு 11 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 11-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. 11-ம் தேதி பிற்பகலில் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் தமிழகத்தில் திட்டமிட்ட படி கலந்தாய்வு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு இடங்கள்

இதுதொடர்பாக மாணவர் சேர்க்கை தேர்வு குழு செயலாளர் செல்வராஜ் கூறும்போது, ‘‘தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக எம்டி, எம்எஸ் போன்ற மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு 562 இடங்கள், மருத்துவப் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 200 இடங்கள் மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பான எம்டிஎஸ்-க்கு 19 இடங்கள் உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வில் இந்த இடங்கள் நிரப்பப்படும். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது” என்றார்.

75 சதவீதம் அரசு டாக்டர்கள்

மருத்துவப் பட்ட மேற்படிப்பு தரவரிசைப் பட்டியலில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் தரவரிசைப் பட்டியலில் முதல் 600 இடங்களில் பெரும்பாலும் அரசு டாக்டர்கள் இடம் பிடித்துள்ளனர். மருத்துவப் பட்ட மேற்படிப்பு தரவரிசைப் பட்டியலில் புவனேஸ்வரியும், பல் மருத்துவப் பட்டமேற்படிப்பு தரவரிசைப் பட்டியலில் கலாதேவியும் முதல் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அரசு டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.செந்தில், அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம், சென்னை மாவட்டத் தலைவர், க.இளஞ்சேரலாதன், தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் செயலாளர் கதிர்வேல் ஆகியோர் கூறும்போது, “சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தபடி கடினமான மற்றும் தொலைதூரம், மலைப்பிரதேசங்கள், டிஎன்ஆர் (திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம்) மற்றும் கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஓர் ஆண்டுக்கு 10 சதவீதம், 2 ஆண்டுக்கு 20 சதவீதம், 3 ஆண்டுக்கு 30 சதவீதம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை வைத்து, இந்த சதவீதம் கணக்கிடப்பட்டு சேர்க்கப்படுகிறது. தரவரிசைப் பட்டியலில் அரசு டாக்டர்கள் 1,800 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் அதிகம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவரையும், மலைப் பிரதசேத்தில் பணியாற்றுபவரை யும் ஒரே மாதிரியாக பார்த்து மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட, வட்ட மருத்துவமனை களில் பணியாற்றும் டாக்டர்கள் மதிப்பெண் வழங்கப்படாததால், அவர்களால் தரவரிசைப் பட்டியலில் இடம் பெறமுடியவில்லை.

தரவரிசைப் பட்டியலில் முதல் 600 இடங்களை பெரும்பாலும் அரசு டாக்டர்கள் பெற்றுள்ளதால், கலந்தாய்வில் 80 சதவீத இடங்கள் அவர்களுக்கே கிடைக்க வாய்ப் புள்ளது. அரசு மருத்துவமனை களில் பணியாற்றாத டாக்டர்கள் தரவரிசைப் பட்டியலில் பின்தங்கி இருப்பதால், அவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டாலும் இடம் கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது” என்றனர்.

50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x