Published : 19 Nov 2014 10:01 AM
Last Updated : 19 Nov 2014 10:01 AM

திண்டுக்கல்லில் சினிமாவை விஞ்சும் சம்பவம்: மதுரை நகைக்கடை ஊழியர்களை தாக்கி 2.200 கிலோ தங்க நகைகள் கொள்ளை

திண்டுக்கல்லில் நகைக்கடை ஊழியர் இருவரை பைக்கில் வந்த ஹெல்மெட் கொள்ளையர்கள் தாக்கி ரூ.55 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெருவில் `ஸ்ரீ' தங்க நகைக்கடை உள்ளது. இந்த கடையில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தங்க நகைக்கடைகளுக்கு தேவையான தங்க நகைகள் ஆர்டர் அடிப்படையில் செய்து கொடுக்கப்படுகிறது. இந்தக் கடையில், மதுரை முனிச் சாலையை சேர்ந்த பிரபாகர் (48), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (40) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். ஆர்டர் கொடுக்கும் நகைக் கடைகளுக்கு இவர்கள் நகைகளை எடுத்துச் சென்று வழங்கி வந்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் நகைக் கடை களுக்கு ஆர்டர் கொடுத்த 2 கிலோ 200 கிராம் தங்கநகை களை எடுத்துக் கொண்டு இருவரும் பஸ்ஸில் திண்டுக்கல் வந்தனர்.

மதியம் 12.30 மணிக்கு திண்டுக்கல் பேகம்பூர் யானை தெப்பம் பஸ் நிறுத்தத்தில் இருவரும் தங்க நகைகள் அடங்கிய பையுடன் கீழே இறங்கியுள்ளனர். பஸ் புறப்பட்டுச்சென்ற மறு நிமிடத்தில் பஸ் நிறுத்தத்தில் இரு பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து காத்திருந்த 3 கொள்ளையர்கள், பஸ்ஸில் இருந்து இறங்கிய மற்றொரு மர்மநபர் என மொத்தம் 4 பேர் சேர்ந்து இரு நகைக்கடை ஊழியர்களையும் தாக்கினர். நகைக்கடை ஊழியர்களும், அருகில் நின்ற பொதுமக்களும் சுதாரிப்பதற்குள் ஹெல்மெட் கொள்ளையர்களும், பஸ்ஸில் இருந்த மர்மநபரும் நகைக்கடை ஊழியர்களிடம் நகைப்பையை பறித்துக்கொண்டு சென்றனர். அவர்களை பொதுமக்கள் துரத்தியுள்ளனர். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் ஹெல்மெட் கொள்ளையர்கள் சினிமாபோல, நகைகளைப் பறித்துக்கொண்டு பழநி சாலையில் தப்பிச்சென்றனர்.

தகவல் அறிந்த டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம், எஸ்.பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிடாதபடி பழநி, வத்தலகுண்டு, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து சாலைகளிலும் உள்ள சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், போக்குவரத்து போலீஸார் உஷார்படுத்தினர்.

நகைகளைப் பறிக்கொடுத்த தமிழ்செல்வன், பிரபாகரிடம் டி.ஐ.ஜி-யும், எஸ்.பி-யும் தெற்கு காவல் நிலையத்தில் விசாரித் தனர். கொள்ளையர் தாக்கியதில் காயம் அடைந்ததால் நடந்த விவரங்களை அவர்களால் தெரிவிக்க முடியவில்லை. அவர் களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபகாலத்தில் திண்டுக்கல்லில் நடந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவம் என்பதால் மாவட்டம் முழுவதும் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x