

சிவகங்கை மாவட்டத்தில் வனப்பகுதியில் குடிநீருக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் இருந்து குடிநீரைத் தேடி வரும் புள்ளி மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது குறைந்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், வனத் துறைக்கு சொந்தமாக 21 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. அதிலும் 13 ஆயிரம் ஹெக்டேர் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் கட்டுப்பாட்டில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள 8 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. வனக்காடுகளாக உள்ள இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளன. பிரான்மலை உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டெருமைகள், மயில்கள், முயல்கள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன.
தற்போது, கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீரைத் தேடி வனப்பகுதியில் இருந்து வரும் புள்ளி மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. நாய்கள் கடித்தும் சில மான்கள் இறக்கின்றன. இதைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:
மாவட்டத்தில் புதுவயல், செஞ்சை, சங்கரபதி, பனங்குடி ஆகிய நான்கு இடங்களில் சூரிய ஒளி மின் மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் வனச்சரகத்துக்குட் பட்ட மண்மலைக்காடு, கம்பனூர், பிரான்மலை ஆகிய பகுதிகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட் டுள்ளன. போதுமான தண்ணீர் வசதியுள்ளதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீருக்காக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் புள்ளி மான்கள் வாகனத்தில் அடிபட்டு இறக்கும் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
மேலும் சுமார் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் புள்ளி மான்கள் வசிக்கின்றன. அந்த இடங்களில் சுமார் 5 மீ. நீளம், 5 மீ. அகலத்தில் பிளாஸ்டிக் பாய் மூலம் தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகிக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம் என்றார்.