

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாம்புகளை பிடித்த 8 பாம்பாட்டிகளிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட 360 பாம்புகளும் சென்னை வனஉயிரின பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இயங்கி வரும் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள முட்புதர்களில், விஷப் பாம்புகள் நடமாடுவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆலை நிர்வாகம் காரைக்குடி அருகே உள்ள சாயல்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி(29), கண்ணன்(48), லட்சுமணன்(56), முருகன்(20), ஆர்.கண்ணன்(50), அமாவாசை (55), முருகன்(45), கண்ணன்(34) ஆகிய பாம்பாட்டிகளை வர வழைத்தது.
அவர்கள், கடந்த 2 நாட்களாக ஆலை வளாகத்தில் சுற்றித் திரிந்த பாம்புகளை கோணிப் பையில் பிடித்தனர். இந்த தகவலை அறிந்த ஊர்மக்கள் ஏராளமானோர் ஆலையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்ட பாம்புகள் ரயில் மூலம் சாயல்குடிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்த மதுராந்தகம் வனத்துறையினர் மற்றும் சென்னை வன உயிரின பாதுகாப்பு குழுவினர் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, பிடிபட்ட 360 பாம்புகள் மற்றும் பாம்பாட்டிகளை, வன உயிரின பாதுகாப்பு குழுவி னரிடம், மதுராந்தகம் வனத்துறை யினர் ஒப்படைத்தனர். 8 பாம் பாட்டிகளையும், சென்னை வேளச் சேரியில் உள்ள வன உயிரின பாதுகாப்பு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு நிறுவன வளாகத்தில் இருக்கும் பாம்பை பிடிக்க வேண்டுமென்றால், வன உயிரின அலுவலர் எங்களுக்கு அனுமதி வழங்குவார். நாங்கள், எங்களிடம் பதிவு செய்துள்ள இருளர் சங்க உறுப்பினர்களைக் கொண்டு அந்த பாம்புகளை பிடிப்போம்.
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, எங்களிடம் எந்த அனுமதியும் கோராமல், அவர்களே ஆட்களை நியமித்து பாம்புகளை பிடித்து வந்தது நேற்று நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, பாம்பு பிடித்துக்கொண்டிருந்த 8 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இது தொடர்பாக ஆலை நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்டிருக்கிறோம்.
360 பாம்புகளை கைப்பற்றி இருக்கிறோம். அதில் நல்ல பாம்பு, சாரை பாம்பு, மண்ணுளி பாம்பு, தண்ணீர் பாம்பு, கண்ணாடி விரியன் ஆகிய வகைகள் உள்ளன. அவற்றை விரைவில் வனப் பகுதிகளில் விட்டுவிடுவோம். பாம்பு பிடித்த எட்டு பேருக்கும் வன உயிரின பாதுகாப்பு சட்டம்- 1972-ன் படி உரிய அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.