Published : 09 Apr 2017 07:42 AM
Last Updated : 09 Apr 2017 07:42 AM

சர்வதேச தரத்துடன் தயாராகும் ‘ரயில் 18’: சென்னை - பெங்களூரு இடையே இயக்க திட்டம் - ஐசிஎப் பொதுமேலாளர் அறிவிப்பு

சர்வதேச தரத்துடன் தயாராகி வரும் ‘ரயில் 18’ என்ற சொகுசு ரயிலின் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிவடையும் என ஐசிஎப் பொதுமேலாளர் எஸ்.மணி தெரிவித்துள்ளார்.

ஐசிஎப்-ல் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்து பொதுமேலாளர் எஸ்.மணி, தலைமை இயந்திர பொறி யாளர் எல்.சி.திரிவேதி ஆகி யோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கடந்த 2016-17ம் ஆண்டில் ஐசிஎப் தொழிற்சாலையில் மொத்தம் 2,277 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இது முந்தைய ஆண்டைவிட 14 சதவீதம் அதிகமாகும். ஒவ் வொரு ஆண்டும் உற்பத்தியின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அடுத்தகட்டமாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக ரயில் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பது, தரத்தை மேம்படுத்துவது, பாது காப்பு அம்சங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளோம்.

இந்த நிதி ஆண்டில் (2017-18) மொத்தம் 2,400 பெட்டிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயித் துள்ளோம். இதில் அனைத்து வகையான பெட்டிகளும் அடங்கும். ஐசிஎப்-ல் வடிவமைக்கப்பட்ட 60 ஆண்டுகள் பராம்பரியமான பெட்டிகள் தயாரிப்பு அடுத்த நிதி ஆண்டு முதல் முற்றிலும் நிறுத்தப்படும். இதற்கு மாற்றாக ஜெர்மன் தொழில்நுட்ப வசதி யுடன் பாதுகாப்பு அம்சங் கள் அதிகம் உள்ள எல்எச்பி பெட்டிகளின் தயாரிப்பு அதிகரிக் கப்படும்.

சர்வதேச தொழில்நுட்ப தரத் துடன் ‘ரயில் 18’ என்ற சொகுசு ரயிலின் தயாரிப்புப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிவடையும். இந்த ரயிலில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும், பயணிகளுக்கான புதிய வசதிகளும் இடம் பெற்றுள் ளன. இது, மணிக்கு 160 கி.மீ, வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. வை-பை வசதி, திரைகள் மூலம் ரயில் நிலையம் குறித்த தகவல்கள், பயோ கழிவறை, முழுவதும் ஏசி பெட்டிகள், எல்இடி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு பயணிகள் எளிமையாக செல்லலாம். வேகமாக சென்றாலும் அதிர்வுகள் குறைந்து சொகுசான பயணத்தை பயணிகள் மேற்கொள்ள முடியும். தெற்கு ரயில்வேயில் முதல்கட்டமாக சென்னை - பெங்களூர் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன

ஐசிஎப்-ல் தற்போது கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பெட்டிகள் தயாரித்து வருகிறோம். இதேபோல, மற்ற மெட்ரோ ரயில் நிறுவனங்களுக்கு போதிய பெட்டிகளை தயாரிக்க மத்திய நகர்புற வளர்ச்சித்துறை மூலம் பேசி வருகிறோம்.

ரூ.2,700 கோடி முதலீட்டில் ஐசிஎப்-2 விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் திறப்பு வரும் மே அல்லது ஜூனில் நடக்கும். நிறுவனம் தேர்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் ஐசிஎப்-ல் அதிநவீன ரயில் பெட்டி கள் உற்பத்தி மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர் பார்க் கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x