

தமிழகத்தில் அமைகிற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாஜகதான் தலைமை வகிக்கும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் முரளிதர ராவ் கூறியதாவது:
வழக்கமாக தமிழகத்தில் பாஜக ஏதோ ஒரு அணியில்தான் அங்கம் வகிக்கும். ஆனால் இந்த முறை பாஜகவே ஒரு அணியை வழி நடத்துகிறது. தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. தமிழகத்தில் பாஜகவுக்கு இது வண்ணமயமான காலம்.
எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவான கூட்டணி அமைந்து, பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இன்னும் 2 அல்லது 3 தினங்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்து மாவட்ட அளவில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது, அந்தப் பட்டியலும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பாஜகதான் தலைமையேற்கும்
தமிழகத்தில் அமைகிற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்று கேட்டு பாஜகவுக்கும் தேமுதிகவுக்கு மான உறவை கெடுத்துவிடாதீர் கள். மோடி பிரதமராக வேண்டும் என்று விஜயகாந்த் நினைக்கிறார். இதன் மூலம் அவர் மோடியின் தலைமையை ஏற்றுக்கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. இந்திய அளவில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாஜகதான் தலைமை வகிக்கும். தமிழகம், குஜராத், மேற்குவங்கம் என அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும்.
தேர்தல் அறிக்கை
பாஜகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தயார் செய்துகொண்டிருக்கிறார். இன்னும் 10 நாட்களில் பாஜகவின் தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
தேமுதிக தந்த பட்டியல்:
பாஜக அணியில் தேமுதிகவும்; பாமகவும் குறிப்பிட்ட சில தொகுதிகளை கேட்பதால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அனகை முருகேசன், அருள்செல்வன், அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த பாஜக அமைப்புச் செயலாளர் மோகன்ராஜீலு, பொதுச்செயலாளர் சரவணபெருமாள் ஆகியோரிடம் 14 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை கொடுத்து அவற்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறிச் சென்றதாக கூறப்படுகிறது.