

அண்ணா சாலை அடிசன்ஸ் கட்டிடம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட சென்னையில் 42 கட்டிடங்களை பாரம்பரியமிக்க கட்டிடங்களாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தேர்வு செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் ஏராளமான பாரம்பரிய சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளன. இருப்பினும் அதில் சிலவற்றை மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறையினர் பட்டியலிட்டுள்ளனர். இவற்றைத் தவிர ஏராளமான புராதன சின்னங்கள், காலத்தின் வேகத்தில் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றி்ல் பல கட்டிடங்கள்
தனியார் வசம் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடங்களைப் பாதுகாப்பதற்காக, அவற்றைக் கண்டறியும் பணியை சி.எம்.டி.ஏ கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கியது. இப்பணியில் கட்டிடக் கலை பயிலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.
வரலாறு, கட்டிடக் கலை பாணி மற்றும் கலாச்சாரம் ஆகிய வற்றினை அடிப்படையாகக் கொண்டு, பாரம்பரியமிக்க, எழில்மிகு கட்டிடங்களை
சி.எம்.டி.ஏ மதிப்பீடு செய்தது. சென்னை நகரில் சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோயில், பெரம்பூர் ஜமாலியா பள்ளி, கிங் இன்ஸ்டிடியூட், கச்சாலீஸ்வரர் கோயில், உள்ளிட்ட 66 கட்டிடங்களை பாரம்பரியமிக்க கட்டிடங்களாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரண்டா வது கட்டமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட
42 பாரம்பரிய கட்டிடங்களின் வரைவுப் பட்டியலை சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம் தயாரித்துள்ளது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அடிசன் கட்டிடம்
எழும்பூர் வெஸ்லி சர்ச், பி.ஆர்.ஆண்டு சன்ஸ், அண்ணா சாலை பாட்டா கட்டிடம், அண்ணா சாலை அடிசன்ஸ் கட்டிடம், ரிப்பன் கட்டிடம், கன்னிமரா நூலகம், சென்னை பல்கலைக்கழக செனட் அவுஸ், திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய மசூதி உள்பட 42 கட்டிடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இது பற்றி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை சி.எம்.டி.ஏ-வுக்கு வரும் 27-ம் தேதிக்குள் தெரியப்படுத்தலாம். இந்த கட்டிடங்களின் பட்டியல் சி.எம்.டி.ஏ-வின் இணையதளத்தில் (www.cmdachennai.gov.in)வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக்கேட்புக்குப் பின்னர், அரசுக்கு அவற்றை அனுப்பி, இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.