

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து களம் காணவேண்டும். இந்த நிலை தொடர்ந்தால்தான் காங்கிரஸ் வேகமாக வளரும் என்றார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு.
திருவாரூரில் ஞாயிற்றுக் கிழமை அவர் அளித்த பேட்டி:
“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் முந்தைய அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், மத்தியில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் அடுத்து வரும் அரசு புறக்கணிக்க முடியாத வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளதால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முழு வெற்றியைப் பெறும்.
மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து எதிர் கொள்வதால் கட்சித் தொண் டர்கள் எழுச்சி பெற்றுள்ளனர். இதனால், முன்னைவிட கட்சி வேகத்தோடு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிமுக, திமுகவுடன் காங்கிரஸ் மாறிமாறி கூட்டணி வைத்திருந்ததால், காங்கிரஸ் வளர்ச்சி பெறவில்லை என்பதே சரி. தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து களமிறங்கும் சூழ்நிலை தொடர்ந்தால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் வேகமாக வளரும்.
இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற மத்திய அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மத்திய அரசின் ரூ.8,000 கோடி நிதியுதவியில் அங்கு தமிழர் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார் தங்கபாலு.