

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சேகர் ரெட்டி கூட்டாளி பரஸ்மால் லோதாவுக்கு 21 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்தாண்டு டிசம்பர் 8-ம் தேதி வேலூரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான வாகனத்தில் ரூ.24 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோல சென்னையில் நடத் தப்பட்ட சோதனையில் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றி பதுக்கியதாக சேகர் ரெட்டி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்தை மாற்ற உதவியதாக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் பரஸ்மால் லோதாவை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி 3-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக டில்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லோதா சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், லோதாவின் தாயார் காலமானதால் அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிகோரி அவர் தரப்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி, சிறையில் உள்ள பரஸ்மால் லோதாவுக்கு 21 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இடைக்கால ஜாமீன் காலத்தில் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அதிகாரி ஒருவர் அவருடன் இருக்க வேண்டும் எனவும், 21 நாட்கள் முடிந்ததும் சம்பந்தப்பட்ட சிறையில் லோதா நேரில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.