

கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு தொடர்பாக குழப்பம் நீடிப்பதால், இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிறு, குறு விவசாயிகள் பெற்ற சுமார் ரூ.5,870 கோடி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஜெய லலிதா அறிவித்தார். ஆனால், பெரிய விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையும் ரூ.5 ஆயிரம் கோடிக்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்வரின் கடன் அறிவிப்பு தொடர்பாக, கூட்டுறவுத் துறை யினர் உரிய வழிகாட்டு நெறிமுறை களை அறிவிக்காமலும், கடன் தள்ளுபடி நடவடிக்கைகளைத் தொடங்காமலும் உள்ளனர். இதனால், விவசாயிகளிடையே குழப்பம் நிலவுகிறது.
மேலும், கூட்டுறவுத் துறை பதிவாளராக இருந்த ஜெய முரளிதரன், முதல்வரின் செய லாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், கூட்டுறவுத் துறை பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதன் காரணமாகவும், சாகுபடிப் பருவம் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் புதிய கடன்களைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினையில் தலை யிட்டு, உண்மை நிலையை தெளிவுபடுத்துவதுடன், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அனைத்து விவசாயி களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் நீராதாரப் பிரச்சினை, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், வரும் 12-ம் தேதி சென்னை ராயப்பேட்டை எம்.எஸ். மகாலில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.