

"குடும்பத்துக்கு ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது, தவறு செய்தால் அரசு விதிக்கும் தண்டனைகளுக்கேற்ப உடலுழைப்பு முகாமில் பணிபுரிய வேண்டும்" என்ற இரு முக்கிய கொள்கைகளில் திருத்தம் செய்ய சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது. சீன மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதில் இவ்விரு அம்சங்களும் பெரும் பங்கு வகித்தன.
பொருளாதாரம் தொடர்பாகவும் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தைச் சீரமைக்க தனியார் நிதியளிப்புக்கும் அனுமதி தரப்படும். தனியார் முதலீடு செய்து வங்கிகளைத் தொடங்கலாம். முக்கியமான துறைகளில் சந்தைகளில் போட்டிக்கு அனுமதி தரப்படும். விவசாயிகளின் உடைமைகளுக்கு அரசு தகுந்த பாதுகாப்பை வழங்கும். சுற்றுச்சூழலைக் கெடுப்பவர்கள் அதற்கான தண்டனையாக அரசு விதிக்கும் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டும். விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ள நேரிட்டால் அதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்ற முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நான்கு நாள்களுக்கு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை முடிவுற்றது. அதிபர் ஷி சின்பிங் தலைமை வகித்தார். மொத்தம் 60 சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட ஒப்புதல் பெறப்பட்டது. இந்த முடிவுகள் பின்னர்தான் பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கப்பட்டன.
அதிபரின் அறிவிப்பு
பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டவும் சமூகத்தை மேம்படுத்தவும் நாட்டுப்பற்றோடு நாட்டைக் கட்டி எழுப்பவும் இந்த முக்கிய முடிவுகள் உதவும். இந்தப் பணிகள் அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சி என்ற “ஒரே அமைப்பின் கீழ்” மேற்கொள்ளப்படும் என்று அதிபர் ஷி சின்பிங் அறிவித்தார். அவருடைய அறிவிப்பை சீன அரசின் பத்திரிகை நிறுவனம் சின்ஹுவா வெளியிட்டது.
ஒரே கட்சியின் ஆட்சியை வலுப்படுத்திய அதே வேளையில், சீன மக்களின் மனங்களில் மிகப்பெரிய நெருடலை ஏற்படுத்திவந்த இரு அம்சங்களை நீக்குவதென்ற முடிவையும் எடுத்திருக்கிறார். இதன் மூலம் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அதிகரிக்கும் என்று அவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் நம்புகின்றனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கப்போகும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கடந்த சில மாதங்களாகத் தங்களுடைய எதிர்பார்ப்பைப் பல்வேறு வடிவங்களிலும் தெரிவித்துவந்தனர். அவர்கள் எவருமே எதிர்பார்த்திராததுதான், குழந்தை பெறுவதற்கான கட்டுப்பாடு நீக்கமும், கட்டாய உடலுழைப்பு முகாம்கள் மூடல் பற்றிய முடிவும்.
அரசின் இந்த முடிவால் அதிபர் ஷி ஜின்பிங்கும் பிரதமர் லீகெகியாங்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிம்மதியாக ஆட்சி நடத்த முடியும். டெங் சியோபிங்குக்குப் பிறகு ஷி ஜின்பிங்கின் கைகளில்தான் சீன அரசின் அதிகாரங்கள் அனைத்தும் குவிக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு உரிமைகள் அதிகம் கொடுக்கப்பட்டதுபோலத் தெரிந்தாலும் அதிகாரம் மிக்கதொரு நிர்வாகத்துக்கே இது வழிசெய்திருக்கிறது என்கிறார் ஷாங்காய் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருக்கும் ஜியா காங்கின். சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் வலுப்படுத்தவும் புதிய நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் கருதுகிறார்.
இரண்டு வடிகால்கள்
சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் எந்த அரசும் மக்கள் எதிர்ப்பைச் சந்திக்க வாய்ப்புகள் அதிகம். அப்படியொரு நிலைமை ஏற்படாமலிருக்கவும், சித்தாந்தரீதியாக இறுக்கமான சூழல் நிலவாமல் தவிர்க்கவும், மக்களுடைய மனங்களை வெகுகாலமாக அரித்துவந்திருக்கும் இரண்டு முக்கிய அம்சங்களுக்கு வடிகால்களை ஏற்படுத்தி இருக்கிறது அரசு என்கிறார்.
“நகர்ப்புறங்களில் வசிக்கும் தம்பதியர் ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர் இருவருமே அவரவர் பெற்றோருக்கு ஒற்றைக் குழந்தைகள்தான் என்றால் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்” என்ற விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தான் அது தெளிவாக அறிவிக்கப்பட்டிருப்பதாக மக்கள்தொகை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் வாங் குவாங்ஷூ தெரிவிக்கிறார்.. “கிராமப்புறத் தம்பதியர் இரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிராமங்களில் பலர் இரண்டுக்கும் மேலேகூட பெற்றுக்கொள்கிறார்கள்.
குழந்தை பிறப்பு உயரும்
“1970-களிலிருந்து அமல்படுத்தப்படும் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு முறையில் முதல்முறையாகச் சலுகை தரப்பட்டிருக்கிறது. இப்போது ஆண்டுக்கு சுமார் ஒன்றரைக்கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இனி இதில் மேலும் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்கிறார் வாங் பெங். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் ஷாங்காய் பல்கலைக்கழகத்திலும் மக்கள்தொகையியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
“தம்பதியர் இரு குழந்தைகளைப் பெறவும், காலப்போக்கில் இந்த விஷயத்தில் அரசின் கட்டுப்பாட்டை அறவே நீக்குவதற்குமான இடைநிலை நடவடிக்கையே இந்த முடிவு. இது வரவேற்கத்தக்கது. குழந்தைகளைப் பெறுவது என்பது அவரவருடைய அடிப்படை உரிமை. இந்த விவகாரத்தில் ஆட்சியாளர்களின் மனங்களை மாற்ற 10 ஆண்டுகளுக்கு மேல் பிடித்திருக்கிறது.
நாட்டின் அரிய வளங்கள் விரைவாகத் தீராமல் இருக்கவும் உணவு தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும்தான் “ஒரு குடும்பத்துக்கு ஒரே குழந்தை” என்ற விதி கடுமையாகப் பின்பற்றப்பட்டது. ஆனால் அது சீன மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீனத்தில்தான் கருக்கலைப்பு அதிகமாகச் செய்யப்பட்டது என்று சர்வதேச அளவில் கடுமையான விமர்சனம் எழுந்தது. 2010 கணக்கெடுப்புப்படி சீன மக்கள்தொகை சுமார் 134 கோடி. அதிலும் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகம். வளமையான பொருளாதாரத்தில் நாடு காலூன்றுவதற்கு முன்னதாகவே நாட்டு மக்களில் பெரும்பாலானோர் கிழடுதட்டிப்போகிறார்களே என்ற கவலை பலருக்கு இருந்தது. குழந்தைகள் பிறப்பதற்குள்ள தடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள்தொகை நிபுணர்கள் பலர் இதற்காகவே குரல் கொடுத்தனர்.
உடலுழைப்பு முகாம்கள்
1950-கள் முதலே சீனத்தில் உடலுழைப்பு முகாம்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அரசின் அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உள்பட மறுக்கிறவர்கள், வேலை செய்ய மறுக்கிறவர்கள், சித்தாந்தங்களை எதிர்க்கிறவர்கள், சுதந்திர சிந்தனை உள்ளவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வெறும் சிறைவாசமாக இல்லாமல் உடலுழைப்பை தண்டனையாக விதித்தனர். இரவு நேரங்களில் மட்டும் சிறைகளில் அடைத்துவைக்கப்படுவார்கள். பகலில் விவசாய நிலங்களிலோ, தொழிற்சாலைகளிலோ வேலைவாங்கப்பட்டனர். கைதிகளிடம் வேலைவாங்கவே பல தொழிற்சாலைகள் தனியாகவே நடத்தப்பட்டன. இதனால் அரசுக்கு உற்பத்திச் செலவு கணிசமாகக் குறைந்தது.
இந்த முகாம்கள் “வதைக்கூடங்கள்” என்றும் அரசு எதிர்ப்பாளர்களால் அழைக்கப்பட்டன. ஆனால் ஆட்சியாளர்களோ “மறுகல்விக்கான உடலுழைப்பு முகாம்” என்று அழைத்தனர். ஆனால் இந்த முகாம்களுக்கு ஆள்களை அனுப்பும் பணியைப் காவல் துறையினர்தான் நேரடியாகச் செய்தனர். அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டை விசாரிக்கவோ, குற்றஞ்சாட்டப்பட்டவர் தன் சார்பாக வாதிடவோ வாய்ப்புகள் தரப்படவில்லை. முகாம்களுக்குப் போயும் அரசின் நிலையை ஏற்க மறுத்தவர்களுக்கு தண்டனை மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முறையை நீக்கும் சீர்திருத்த முடிவும் முக்கியத்துவம் வாய்ந்து என்கிறார் நிகோலர் பெகுலின். இவர் சீனத்தில் மனித உரிமைகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்துவருகிறார். இதன் தலைமையகம் நியூயார்க்கில் இருக்கிறது.
இந்தச் சீர்திருத்தம் உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதாலேயே சீன அரசு எதிர்க் கருத்துகளை வரவேற்கிறது, எதிர்க் கருத்துகளைப் பேச அனுமதி தரப்படும் என்றெல்லாம் பொருள்கொள்ளக் கூடாது என்று பெகுலின் எச்சரிக்கிறார். மனித உரிமைகளைத் துச்சமாக மதிப்பதுடன் சட்டச் சீர்திருத்தங்களுக்கும் இந்த நடைமுறை பெரும் தடையாக இருந்ததால் இதை நீக்குவது சரியே என்கிறார் பெகுலின்.
அதே சமயம் இப்போது அறிவித்துள்ள இவ்விரு முக்கியச் சீர்திருத்தங்களும் அப்படியே அமலுக்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். இவற்றுக்கு மீண்டும் புதிய நிபந்தனைகள் சேர்க்கப்படலாம், அல்லது தாமதப்படுத்தப்படலாம் என்கிறார். அரசுக்கு எதிராக விமர்சனம் செய்கிறவர்கள், செயல்படுகிறவர்கள் மட்டுமல்லாமல் பொதுவான குற்றங்களில் ஈடுபட்டவர்களும்கூட உடலுழைப்பு முகாம்களுக்குத்தான் அனுப்பப்படுகின்றனர். எனவே, இவற்றை உடனடியாக மூடிவிடுவது சாத்தியமல்ல என்கிறார் பெகுலின்.
மரண தண்டனைகள் அதிகம்
ஒட்டுமொத்தமாக உலகின் பிற நாடுகளில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளைவிட சீனத்தில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகம். மரண தண்டனைக்கு உள்ளானவர்கள் செய்யும் குற்றங்கள் என்ற பட்டியலில் உள்ள பலவற்றை அதிலிருந்து நீக்கிவிடுவதாகவும் அரசு இப்போது உறுதி அளித்திருக்கிறது. அப்படி எந்தக் குற்றங்களெல்லாம் நீக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை. ஆனால் சீர்திருத்தம் அந்தத் திசையிலும் இருக்கும் என்று கோடி காட்டப்பட்டிருக்கிறது.
நீதித் துறையின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கும், அவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிபர் பேசியிருக்கிறார். அதே சமயம் இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு அமைப்புகள்மீது கடுமையான கண்காணிப்பும் நடவடிக்கைகளும் தொடரும் என்று எச்சரித்திருக்கிறார். சீனத்தின் சமூக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறியிருக்கிறார்.
எதிர்ப்புகள் வலுக்கும்
சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த முடிவுகளை எடுத்திருந்தாலும் இவற்றை அமல்படுத்தும்போது எதிர்ப்புகள் இருக்கும் என்கிறார் ஹாங்காங் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் சீன ஆய்வுப் பிரிவுத் தலைவராக இருக்கும் ஸ்டீபன் கிரீன். அரசின் பல முடிவுகளை சீன அரசின் அமைச்சகங்களும் பெரிய அரசுத் துறை நிறுவனங்களும் உள்ளாட்சிமன்ற அரசுகளுமே எதிர்ப்புத் தெரிவிக்கும் என்கிறார். சந்தைப் பொருளாதாரத்தை முழுமையாக அனுமதித்த பிறகு விலைவாசி உயர்ந்தால் மக்களுமே அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்குவார்கள். சீர்திருத்தங்கள் எல்லாம் ஏட்டளவில் நன்றாக இருக்கின்றன, எப்படி அமல்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறுகிறார்.
இதற்கு முன்னரும் இப்படிப் பல அறிவிப்புகள் வெளியாகி, அவை ஏட்டளவிலேயே நின்றுவிட்டதால் இந்த அறிவிப்புகள் உண்மையாக அமல்படுத்தப்படுமா, அல்லது தாமதப்படுத்தப்படுமா என்று பார்க்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி