

ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்திற்கு இலக்காகும் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 40 சதவிகிதம் வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த பருவமழை மாவட்டத்தையே உலுக்கியது. வெள்ளத்தில் சிக்கி 93 பேர் இறந்திருப் பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தாலும், 297 பேர் இறந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவின் பிறப்பு இறப்பு பதிவேட்டில் பதிவாகியுள்ளது.
பண்ருட்டி வட்டத்தில் மட்டும் 20 பேர் இறந்துள்ளனர். 362 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டன. ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் 675 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. மேலும், 863 கி.மீ, நெடுஞ்சாலையும், 275 இடங்களில் பாலங்களும் உடைந்தன. இதேபோல் 54 ஆயிரத்து 700 ஹெக்டேர் விளை நிலங்களும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் சேதமடைந்தன.
இதையடுத்து அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தாமாக முன்வந்தன. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு பயன் தந்தாலும், நிச்சயமற்ற வாழ்க்கையைத் தான் இதுவரை வாழ்ந்து வருகின்றனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விசூர் கிராமத்தில் வீடிழந்த மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்டித் தரப்படவில்லை. பெரியகாட்டுப்பாளையத்தில் வீடிழந்த வர்களுக்காக கட்டப்படும் வீடுகளும் பாதியிலேயே நிற்கிறது.
(தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள செங்கால் ஓடை. அடுத்த படம்: மேலிருப்பில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம், அண்மையில் பெய்த மழையில் மீண்டும் சேதமடைந்துள்ளது. )
வடிகால் வாய்க்கால்கள், ஓடைகளில் உடைப்பு ஏற்பட்ட இடங்கள் தற்காலிக மாக சீரமைக்கப்பட்டன. ஆனால் அவை, அண்மையில் பெய்த மழையில் மீண்டும் சேதமானது. குறிஞ்சிப்பாடி செங்கால் ஓடையில் தற்காலிகமாக போடப்பட்ட மணல் மூட்டைகள் அப்படியே தொடர்கிறது. பரவனாறு முழுவதும் தூர்ந்துள்ளதால் கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் உள்ளது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் பருவமழை குறித்து தகவல் சேகரித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் மழை இருக்கும் எனவும், கடலூர் மாவட்டத்தில் 30 முதல் 40 சதவிகிதம் வரை கூடுதலாக மழை பெய்யும் என கணித்துள்ளனர்.
பாதிப்புகள் குறித்து விசூரை சேர்ந்த அஞ்சலை என்பவர் கூறும்போது, “கடந்த ஆண்டு மழையில் எனது கான்கிரீட் வீடு அடித்துச் செல்லபட்டது. மழை வெள்ளத்தில் மிஞ்சியது அந்தக் கட்டிடத்தில் பயன்படுத்தி கம்பிகள் மட்டுமே. தற்போது குடிசைக்குள் வாழ்ந்து வருகிறோம். அரசு உதவி கிடைக்கும் என்றார்கள் இதுவரை கிடைக்கவில்லை.
அதே ஊரைச் சேர்ந்த பொன்னம்மாள் கூறும்போது, “வயசு பொம்பள புள்ளங்களை வச்சுக்கிட்டு படாத அவஸ்த பட்றோம். ராத்திரில பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருது, நிம்மதியா தூங்க முடியல. அதுக்குள்ள அடுத்த மழையும் வந்துட்டுது. என்ன பண்ண போறோம்ன்னு தெரியல” என்கின்றனர் கண் கலங்கியபடி.
கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்க செயலர் மருதவாணன் கூறியதாவது: வெள்ள பாதிப்பின்போது, நிவாரணத் தொகை, உணவும் கொடுத்துவிட்டால் போதும் என அரசு நினைக்கிறது. நிரந்தரத் தீர்வுக்கான திட்டங்களோ, வெள்ளத்தில் சேதமடைந்தபோது அரசுக் கட்டிடங்களும், பள்ளிகளோ சரி செய்யப்படவில்லை. வெள்ள பாதிப்பை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள போதுமான தகவல் பரிமாற்றம் இல்லை. மாவட்டத்தில் ஓடும் 4 ஆறுகளிலும் ஆக்கிரமிப்பு உள்ளதால் நீர் கடத்தும் திறன் குறைந்துள்ளது. எதிர்காலத் திட்டங்களுடன் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தினால் மட்டுமே இயற்கை சீற்றத்திலிருந்து கடலூர் மீளும் என்றார்.
மாவட்ட நீர்வள ஆதார உதவி பொறியாளர் கோவிந்தராஜ் கூறுகையில், “கடந்த ஆண்டு பண்ருட்டி மற்றும் நெய்வேலி பகுதியில் 48 செ.மீ வரை அதிகபட்ச மழை பெய்ததால் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கெடிலம் ஆற்றின் நீர் கடத்தும் திறன் 72 ஆயிரம் கனஅடி. ஆனால் அதைக் காட்டிலும் 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்ததால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ரூ.8 கோடி செலவில் கெடிலம் ஆற்றில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதால் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை” என்றார்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ரேவதி கூறும்போது, “பாதிக்கப் பட்ட பகுதிகளில் தென்பெண்ணை ஆறு மற்றும் கெடிலம் ஆற்றின் நீர்வரத்து வாய்க்கால்கள் முற்றிலும் தூர்ந்து, தரையோடு தரையாகக் காணப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு மழை பெய்தாலும் மழை நீர் வெளியேற வாய்ப்பு குறைவு” என்றார்.
விரைவில் பருவமழை தொடங்க வுள்ள நிலையில், இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.