Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM

கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தை செயல்படுத்தத் திட்டம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சென்னை மண்டல வன உயிரின காப்பாளர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் ஏரியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட அரிய வகைப் பறவை இனங்கள் வரும். செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலமாகும். இக்காலகட்டத்தில் இரைக்காகவும் இனப்பெருக்கத்துக்காகவும் அவை வருகின்றன. இந்த அரிய வகைப் பறவைகளைப் பார்க்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், சுற்றுலாப் பயணிகள் வேடந்தாங்கலுக்கு வந்துச் செல்கின்றனர். இந்த சரணாலயம், சென்னை மண்டல வன உயிரின காப்பாளர் அலுவலகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வன உயிரினக் காப்பாளர் கீதாஞ்சலி புதன்கிழமை வேடந்தாங்கல் வந்து ஆய்வு செய்தார். ஆய்வுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இது பொதுவான ஆய்வுதான். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பொங்கல் தினத்தையொட்டி 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவ்வளவு பேர் வரும் நிலையில் குடிநீர், கழிவறை, வாகன நிறுத்தம், கூடுதல் டிக்கெட் கவுண்டர் திறப்பது உள்ளிட்டவைகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஏரிக்குள் மரங்கள் பட்டுப்போய் இருப்பது உண்மை. பறவைகளின் எச்சங்களால், நீரின் பிஎச் (Power of Hydrogen) அளவு அதிகரித்து விடுகிறது. இதனால் மரங்கள் பட்டுப்போகிறது. பறவைகள் சரணாலயப் பகுதியில் மரங்கள் பட்டுப்போவது இயல்புதான். இதை சமநிலைப் படுத்த தற்போது 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறோம் .

வேடந்தாங்கலுக்கு அருகில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளது. வேடந்தாங்கல் ஏரியை விட கரிக்கிலி ஏரிக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. அதற்கு நீர் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதியிலும் ஆய்வு நடத்தப்பட்டது என்றார்.

ஊராட்சி மன்றத் தலைவி யோசனை: கரிக்கிலி ஏரிக்கு நீர் கொண்டு வருவது குறித்து ஊராட்சிமன்றத் தலைவி வனஜா ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது “கரிக்கிலி ஏரிக்கு 4 வாய்க்கால்கள் மூலமாகத்தான் மழை காலங்களில் நீர் வரவேண்டி யுள்ளது. இது போதுமானதாக இல்லை. வனத்துறை சார்பிலும், கிராம ஊராட்சி சார்பில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழும், வாய்க்கால்கள் தூர் வாரப்படுகின்றன. போதிய மழை இல்லாத காரணத்தால் அந்த வாய்க்கால்களில் நீர் வருவதில்லை.

அதற்கு மாற்றாக, நெல்வாய் கிராம ஏரியில் இருந்து நீர் கொண்டு வரலாம். நெல்வாய் மற்றும் கரிக்கிலி ஏரிக்கு இடையே சுமார் 3 கி.மீ தூரத்திற்கு வாய்க்கால் ஏற்படுத்தினால் போதுமானது. நெல்வாய் ஏரி பகுதியில் போதிய நீர் வரத்து உள்ளது. அப்பகுதியில், ஏரிப் பாசனத்தின் மூலம் 2 போகம் விவசாயம் செய்யப்படுகிறது. அதனால் நெல்வாய் ஏரியில் இருந்து நீர் கொண்டு வரும் திட்டத்தை வனத்துறை செயல்படுத்தலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x